வணிகம்

விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவராக அஸிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஸிம் பிரேம்ஜி நேற்று ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவருடைய மூத்த
மகன் ரிஷாத் பிரேம்ஜி அந்நிறுவனத்தின் புதிய  செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.  அவருக்கு தற்போது வயது 42.
அஸிம் பிரேம்ஜியின் ஓய்வுக்கு பிறகு, அதாவது ஜூலை 31 முதல் ரிஷாத் பிரேம்ஜி நிறுவனத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்பார் என்று கடந்த மாதமே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று அது நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், தற்போது அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள அபித்அலி நிமுச்வாலா, இன்று முதல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பேற்க உள்ளார்.

1945 -ம் ஆண்டு சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக தொடங்கப்பட்ட விப்ரோ நிறுவனத்தை, தனது 53 ஆண்டுகால தலைமையில்  ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புமிக்க முன்னணி மென்பொருள் நிறுவனமாக அஸிம் பிரேம்ஜி மாற்றினார். தற்போது அஸிம் பிரேம்ஜிக்கு  74 வயதாகிறது. இந்நிலையில் அவர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை தனது மூத்த மகன் ரிஷாத் பிரேம்
ஜியிடம் ஒப்படைத்துள்ளார். இனிஅவர் இந்நிறுவனத்தின்  அலுவல் பொறுப்புகள் ஏதும் இல்லாத இயக்குநராக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷாத் பிரேம்ஜி ஹார்வேடு பிஸினஸ் ஸ்கூலில் எம்பிஏ – வும் வெஸ்லெயன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும் பயின்றுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு, இவருடையதலைமைத்துவம் மற்றும் சமூக பங்களிப்பு காரணமாக உலகளாவிய சிறந்த இளம் தலைவராக உலகப் பொருளாதார மன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்டார். இவர் விப்ரோவில் சேர்வதற்கு முன்னால் லண்டனில் உள்ள பெய்ன் அண்ட் கம்பெனி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜிஇ கேபிடல் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.  2018-19ம் ஆண்டில் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சார்ந்த தொழில் அமைப்பின் தேசிய சங்கத்தின் தலைவராக இருந்தார்.

SCROLL FOR NEXT