புதுடெல்லி
மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த 25-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால்,
திவால் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள வேண்டியது இருந்ததால் இந்த கூட்டம் ஒத்த வைக்கப்பட்டது.
இந்த கூட்டம் டெல்லியில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. மின்சார வாகனங்கள் உட்பட மின்சார பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
மின்சார வாகன சார்ஜர்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மின்சார பேருந்துகள் வாங்கும் போது ஜிஎஸ்டி வரி முற்றிலுமாக நீக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதால் தற்போதுள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ சேவைத்துறையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.