புதுடெல்லி
அமெரிக்காவின் பிரபல விளையாட்டு பொம்மை தயாரிப்பு நிறுவனமான ஹஸ் புரோ, சீனாவில் உள்ள தனது தயாரிப்பு ஆலையை மூட முடிவு செய்துள்ளது.
தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையே வர்த்தகப் போர் நிலவி வரு கிறது. சீன தயாரிப்புகளுக்கு அமெரிக்காவும், அமெரிக்க தயாரிப்புகளுக்கு சீனாவும் கடும் வரிகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் இருநாட்டு நிறுவனங்களும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இதனால் அமெரிக்காவைச் சார்ந்த பொம்மை தயாரிப்பு நிறுவனமான ஹஸ்புரோ, சீனாவில் உள்ள தனது உற்பத்தி ஆலையை மூட முடிவெடுத்துள்ளது. பதிலாக இந்தியா மற்றும் வியட்நாமில் புதிய ஆலைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஹஸ்புரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரைன் கோல்ட்னர், ‘‘நாங்கள் எங்கள் தயாரிப்புகளை வெவ்வேறு புதிய பிராந்தியங்களுக்கு விரிவு படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தியா மற்றும் வியட்நாமில் புதிய ஆலைகளை திறக்க உள்ளோம்’’ என்று அவர் கூறினார்.
2020 ஆண்டுக்குள் சீனாவில் மேற்கொள்ளப்படும் தனது உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி திபோராஹ் தாமஸ் கூறிய போது, வரி விகிதம் உயந்துள்ளதால் எங்கள் வணிகம் கணிசமாக பாதிப்படைந்து உள்ளது. இவ்வகையான வரி விதிப்பு தொடரும் பட்சத்தில் நிறுவனங்கள் மட்டும் அல்ல, மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.
இந்த மாத ஆரம்பத்தில், அமெரிக்கா 34 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்தது. அதைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரியை உயர்த்தியது.
ஹஸ்புரோ நிறுவனத்தின் ஆலை இந்தியாவில் திறக்கப்படும் பட்சத்தில் அது பொருளாதார வளர்ச்சி ரீதியாக இந்தியாவுக்கு பயன் அளிக்கக் கூடியதாக அமையும் என்று கூறப்படுகிறது.