வணிகம்

ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கிய சீன நிறுவனத்துக்கு தடை: அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் சர்ச்சை

செய்திப்பிரிவு

பெய்ஜிங்

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி சீனாவைச் சேர்ந்த தனியார் கச்சா எண்ணெய் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த செயல் சட்டவிரோதமானது என சீனா எச்சரித்துள்ளது.

ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கி வந்தன. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவுக்கு சில பொருட்களையும், மீதி பாதி அளவுக்கு ரூபாயிலும் இந்தியா செலுத்தி வருகிறது. இதேபோல் சீனாவும் வர்த்தகம் செய்து வந்தது.

கடந்த மே மாதத்துக்கு பிறகு ஈரானிடம் வர்த்தகம் செய்யக்கூடாது என அமெரிக்கா தடை உத்தரவு பிறப்பித்தது. எனினும் ஈரான் கச்சா எண்ணெய் விலை குறைவாகவும், லாபமாகவும் இருப்பதால் உலகின் பல நாடுகள் வெளியே தெரியாமல் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த சுஹாய் சியோன்ரோங் நிறுவனம் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் அதனுடன் மற்ற நாடுகள் வர்த்தகம் செய்யக்கூடாது என தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் ஹு சுனோயிங் கூறியதாவது:

சீனா நிறுவனங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து வர்த்தக தடை விதித்து வருவது ஏற்புடையைது அல்ல. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச சட்டத்திட்டத்தின்படியே நடைபெறுகிறது. அமெரிக்கா தனியாக முடிவுகளை எடுப்பதும், அதனை மற்ற நாடுகள் மீது வற்புறுத்துவதும் ஏற்கத்தக்கதல்ல. சீன நிறுவனங்கள் மீது இதுபோன்ற தடைவயை விதிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் நாட்டு நிறுவனங்களின் உரிமைகளையும், நடவடிக்கைகளையும் பாதுகாப்பது சீனாவின் அடிப்படை கடமை. இதனை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT