வணிகம்

பொதுத் துறை வங்கிகளின் 50 ஆண்டு பயணம் 

செய்திப்பிரிவு

சென்னை

வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு நேற்றோடு 50 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1969 ஜூலை 19-ல், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்தியாவில் இயங்கி வந்த 14 முக்கிய தனியார் வங்கிகளைப் பொதுத் துறை வங்கிகளாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் 6 தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.

சுதந்திரத்துக்கு பிறகான காலகட்டத்தில், வங்கி நிதிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்பட வேண்டுமெனில், வங்கிகளை அரசுடமையாக்குவதை தவிர வேறு வழிகள் இல்லை என்ற நிலை உருவானது.

இந்நிலையில்,1969 ஆண்டு ஜூலை 19 அன்று ரூ.50 கோடிக்கும் மேல் வைப்புத் தொகையை கொண்டிருந்த 14 தனியார் வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டன. அவை, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, தேனா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி, அலகாபாத் வங்கி, யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா, யுகோ வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியன ஆகும்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு, 1980 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.200 கோடிக்கு மேல் வைப்புத் தொகையை கொண்டிருந்த 6 தனியார் வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டன. ஆந்திரா வங்கி, விஜயா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேட் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, நியூ பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 6 வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டன.

அதன் பிறகு 1990-ம் ஆண்டு, தாராளமய பொருளாதாரக் கொள்கை கொண்டு வரப்பட்ட சமயத்தில் வங்கித் துறையில் தனியார் நிறுவனங்கள் கால் பதிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி, தனியார் வங்கித் துறையில் உலகளா விய வங்கிகளுக்கு உரிமம் வழங்குவதற் கான வழிகாட்டுதல்களை 2016 ம் ஆண்டு வெளியிட்டது. இடைப்பட்ட கால கட்டத்தில் சில பொதுத் துறை வங்கிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன. தற்சமயம் இந்தியாவில் 18 பொதுத் துறை வங்கிகள் உள்ளன.

இந்த ஐம்பதாண்டு காலத்தில் பொதுத் துறை வங்கிகள் இந்தியப் பொருளா தார வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு ஆற்றியிருக்கின்றன. பெரு நிறுவனங்கள், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயம், வணிகம் என நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படையான அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் இந்தியப் பொதுத் துறை வங்கிகள் பெரும் பங்களிப்பை செலுத்தி இருக்கின்றன.

வங்கித் துறை கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது. 1970 களில் பிரின்டர், தொலைநகல், கால்குலேட்டர் என்ற அளவிலேயே வங்கிகள் இருந்தன. 1980-களில் காசோலையில் காந்த மை எழுத்து கொண்டுவரப்பட்டது. அதே காலகட்டத்தில் வங்கிகளில் கணினியின் வரவு நிகழ்ந்தது.

1990-களில் மிக முக்கியமான முன்னெடுப்பு வங்கித் துறையில் கொண்டுவரப்பட்டது. வங்கிக் கிளைகளுக்கிடையான மைய ஒருங்கிணைப்பு இந்த காலகட்டத்தில் சாத்தியப்படுத்தப்பட்டது.

2000-த்துக்குப் பிறகு ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2010-க்குப் பிறகு மொபைலிலேயே வங்கிச் சேவைகள் அனைத்தையும் பெறலாம் என்கிற அளவுக்கு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.

பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய வங்கித் துறைகளில் அந்தந்த காலகட்டத்தின் நவீன தொழில் நுட்பங்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடு களுக்கு இணையான தொழில் நுட்பத்தை தற்போது இந்தியா கொண்டிருக்கிறது எனலாம். தற்சமயம், ஏறத்தாழ அனைத்து இந்திய குடும்பங்களும் வங்கிக் கணக்கை வைத்துள்ளன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பெரிய அளவில் வளரத் தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT