புதுடெல்லி
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எல்பிஐ கேஸ் இணைப்பு பெற்றவர்களில் 86 சதவீதத்தினர் இரண்டாவது மாற்று சிலிண்டரை பெற்றிருக்கிறார்கள் என தர்மேந்திரா பிரதான் மக்களவையில் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணெய் நிறுவனங்கள் அனைவருக்கும் கேஸ் இணைப்பு சென்றடையும் வகையில் நாடு முழுவதும் 9000 டீலர்களை உருவாக்கின.
இதன் விளைவாக நாடு முழுவதும் எல்பிஐ கேஸ் இணைப்பை வழங்குவது எளிதானது. 8, ஜூலை 2019 நிலவரப்படி கிட்டத்தட்ட 7.34 கோடி கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதில் 86 சதவீத பயனாளிகள் இரண்டாவது சிலிண்டரைப் பெற்றிருக்கிறார்கள் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. கேஸ் இணைப்புக்கான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதும் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது இதைத் தெரிவித்தார்.
உஜ்வாலா பயனாளிகள் தொடர்ந்து கேஸ் இணைப்பு சேவையைப் பயன்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருவதாக கூறினார். அதற்காக 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்குப் பதிலாக 5 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் வழங்கும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.
மேலும் கேஸ் சிலிண்டரைப் பாதுகாப்பாக பயன்படுத்த தேவையான விழிப்புணர்வையும் பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆடியோ விஷ்வல் மீடியா மூலம் பிரச்சாரம் செய்ய உள்ளது. அதேபோல் அடுத்தடுத்து மாற்று சிலிண்டர் பெறாதவர்கள் எஸ்எம்எஸ் மூலமாக அறிவுறுத்தப்படுவார்கள். இவைதவிர வழக்கமான விளம்பர பிரச்சார உத்திகளும் செயல்படுத்தப்படும் என்றார்.
உஜ்வாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கிட்டதட்ட மாரடைப்பு நோயாளிகள் எண்ணிக்கை 20 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது என்றார்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கேஸ் இணைப்புகளால் மக்களிடையே பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் பயனாளிகள் தொடர்ந்து அதன் பலனை அடைய அவர்கள் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், சமைக்கும் முறை, சிலிண்டரின் விலை, இலவசமாக விறகுகள், வறட்டி எளிதில் கிடைப்பது போன்றவற்றில் மாற்றங்கள் வர வேண்டும். அப்போதுதான் உஜ்வாலா திட்டத்தின் பலன் முழுமையாகக் கிடைக்கும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.