ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறை சந்தையில் நுழையும்போது, ஜியோ எண்களின் அழைப்புகளை போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவன எண்கள் நிராகரித்தன. அழைப்புகள் சரிவர செயல்படவில்லை. இது திட்டமிட்ட எதிர்ப்பு என்று கூறி இந்த நிறுவனங்கள் மீது டிராய் அபராதம் விதித்தது.
ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு தலா ரூ.1,050 கோடி அபராதமும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ.950 கோடி அபராதமும் விதித்திருந்தது. டிராயின் இந்த முடிவுக்கு இந்த நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த விவகாரத்தில் தொலைத் தொடர்பு துறை தலையிட்டு தற்போது தொலைத் தொடர்பு துறை நெருக்கடி காலத்தை சந்தித்துக்கொண்டிருப்பதால் டிராயிடம் அபராதத்தில் மாற்றங்களைச் செய்ய அறிவுத்தியது.
இந்நிலையில் விதித்த அபராதத்தை மாற்ற டிராய் சட்டப்படி முடியாது எனக் கூறியுள்ளது. எங்களுடைய பரிந்துரையை அரசுக்கு வழங்கியாகிவிட்டது. இனி இறுதி முடிவை அரசுதான் எடுக்க வேண்டும். டிராய் ஆணையத்தினால் எந்த பரிந்துரையும் செய்ய முடியாது எனக் கூறிவிட்டது. தற்போது வோடபோன், ஐடியா நிறுவனங்கள் இணைந்து ஒரே நிறுவனமாக ஆகிவிட்டதால் புதிய வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.2,000 கோடி அபராதம் செலுத்த வேண்டும்.