ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதி யாளர்களுக்கு வட்டி மானிய திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்திய ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில் அதை ஊக்குவிப்பதற்காக வட்டி மானியத் திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாக அவர் கூறினார்.
சர்வதேச அளவில் நிலவும் தேக்க நிலை காரணமாக ஏற்றுமதியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். சர்வதேச அளவில் கரன்சிகளின் மதிப்பில் ஸ்திரமற்ற நிலை நிலவுவது யூரோவின் சரிவு ஆகியனவும் இதற்கு முக்கியக் காரணமாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் புதிய சந்தைகளைக் கண்டறிவது உள்ளிட்ட நடவடிக் கைகள் குறித்து ஆராயுமாறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி ஆலோசனைக் குழுக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வட்டி மானியத் திட்டத்தின்படி ஏற்றுமதியாளர்கள் குறைந்த வட்டிக்கு வங்கிகளில் கடன் பெறலாம். இது ஒரு வகையில் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் என அரசு நம்புகிறது. தொடர்ந்து 7 மாதங்களாக நாட்டின் ஏற்றுமதி சரிவைச் சந்தித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஏற்றுமதியாளர்களுக்கு 3 சதவீத சலுகை வட்டியில் அளிக்கப்பட்ட கடன் திட்டம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்து விட்டது. தற்போது மீண்டும் இத்திட்டத்தைக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கிரீஸில் ஏற்பட்ட நிதி நெருக்கடியானது ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ள உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை ஒருபோதும் பாதிக்காது என்று அவர் குறிப்பிட்டார். அடுத்த மாதம் இது தொடர்பாக இந்திய தரப் பும் ஐரோப்பிய யூனியன் பிரதி நிதிகளும் பேச்சு நடத்த உள்ள தாக அவர் கூறினார்.