வணிகம்

பிரமல் ரியால்டியில் வார்பர்க் பின்கஸ் ரூ.1,800 முதலீடு

செய்திப்பிரிவு

சர்வதேச பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸ், பிரமல் ரியால்டி நிறுவனத்தில் ரூ.1,800 கோடி முதலீடு செய்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்கி இருக்கிறது. ஆனால் எவ்வளவு பங்குகள் என்பது வெளியிடப்படவில்லை.

முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகை விரிவாக்கப் பணிகளுக்கும், மும்பைக்கு அருகில் இடம் வாங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்றும் பிரமல் ரியால்டி தெரிவித்திருக்கிறது.

பிரமல் ரியால்டி நிறுவனம் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமலின் மகன் ஆனந்த பிரமல் புதிய நிறுவனத்துக்கு பொறுப்பேற்றார். இவர் ஹார்வேர்ட் நிர்வாகவியல் கல்லூரியில் படித்தவர். மும்பையை சேர்ந்த இந்த நிறுவனம் சுமார் 1 கோடி ச.அ. பரப்பளவில் கட்டுமான பணிகளை மும்பையின் முக்கிய பகுதியில் மேற்கொண்டு வருகிறது.

நாங்கள் அதிக வளர்ச்சி இருக்கும் நிறுவனத்தில் மட்டுமே முதலீடு செய்வோம். பிரமல் ரியால்டி அதிக வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம் என்று வார்பர்க் பின்கஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த முதலீடு காரணமாக பிரமல் ரியால்டி நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் வார்பர்க் பின்கஸ் நிறுவனத்தின் சார்பில் இருவர் இருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வார்பர்க் பின்கஸ் நிறுவனத்துடன் இணைவது குறித்து நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் என்று பிரமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமல் தெரிவித்திருக்கிறார். மேலும், வார்பர்க் எங்களது குழுமத்தில் இரண்டாவது முறையாக முதலீடு செய்கிறது. 1997-ம் ஆண்டு பிரமல் ஹெல்த்கேர் நிறுவனத்தில் வார்பெர்க் பின்கஸ் முதலீடு செய்தது. இந்த நிறுவனத்தின் முதலீடும் அனுபவமும் எங்களை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்லும் என்றார்.

கல்யாண் ஜூவல்லர்ஸ், லெமன் ட்ரீ, கார் டிரேட், கேபிடல் பர்ஸ்ட் குவிக்கர், ஏவிடெக் உள்ளிட்ட சில இந்திய நிறுவனங்களில் வார்பர்க் பின்கஸ் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.

SCROLL FOR NEXT