நிறுவனங்கள் தங்களது நிகர லாபத்தில் 2 சதவீதம் சமூக பொறுப்புணர்வுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. ஆனால் முக்கியமான சில நிறுவனங்கள் இதற்கு செலவு செய்யவில்லை என்று தெரிய வந்திருக்கிறது.
சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 30 நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் எவ்வளவு தொகையை செலவு செய்தன என்பது குறித்த தகவலை வெளியிட்டிருக்கின்றன. இந்த 15 நிறுவனங்கள் சுமார் 2,100 கோடி ரூபாய் அளவுக்கு சமூக பொறுப்புணர்வுக்காக செலவு செய்திருக்கின்றன.
ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, டாக்டர் ரெட்டீஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய நிகர லாபத்தில் 2 சதவீதத்துக்கும் கீழே செலவு செய்திருக்கின்றன. அதே சமயத்தில் இந்த நிறுவனங்கள் மீதம் இருக்கும் தொகையை சமூக பொறுப்புணர்வுக்கு செலவு செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கின்றன.
இந்த பட்டியலில் ரிலையன்ஸ் முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 761 கோடி ரூபாய் (நிகரலாபத்தில் 2.85%) செலவு செய்திருக்கிறது. ஹெச்டிஎப்சி வங்கி 1.2 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 1.81 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 1.84 சதவீதமும், எஸ்பிஐ 1.06 சதவீதமும் சமூக பொறுப்புணர்வுக்காக செலவு செய்திருக்கின்றன.