வணிகம்

ரேடியோ ஏலத்தில் ரெட் எப்எம் பங்கேற்கலாம்

செய்திப்பிரிவு

சன் குழுமத்தை சேர்ந்த ரெட் எப்.எம். ஏலத்தில் பங்கேற்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் மத்திய அரசு கடந்த ஜூலை 15-ம் தேதி ரெட் எப்.எம்.க்கு பாதுகாப்பு அனுமதி வழங்கமுடியாது என்றும் எப்.எம். ஏலத்தில் பங்கேற்க முடியாது என்று மத்திய அரசு கடிதம் மூலம் தெரிவித்திருந்ததையும் ரத்து செய்திருக்கிறது.

டிஜிட்டல் ரேடியோ பிராட்காஸ்டிங் (ரெட் எப்எம்) நிறுவனம் எப்.எம். ஏலத்தில் பங்கேற்க, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாதர் டியூரெஸ் அகமது மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோரடங்கிய அமர்வு அனுமதி கொடுத்தது. இதனால் இன்று நடைபெற இருக்கும் இ-ஏலத்தில் ரெட் எப்.எம் பங்கேற்கலாம்.

இதர விதிமுறைகள் பூர்த்தியாகும் பட்சத்தில் எப்.எம். ஏலத்தில் பங்கேற்க டிஜிட்டல் ரேடியோ பிராட்காஸ்டிங் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

தகவல் ஒலிப்பரப்பு அமைச்சகம் ஒரு மணிநேரம் கூட ஏலத்தை தள்ளிவைக்க முடியாது என்று கூறியதால் நேற்று சிறப்பு அமர்வு கூடியது.

டிஜிட்டல் பிராட்காஸ்டிங் நிறுவனம் ரெட் எப்.எம். என்னும் பெயரில் டெல்லி மும்பை ஆகிய இடங்களில் எப்.எம். சேவையை வழங்கி வருகிறது. சன் டிவி நிறுவனத்துக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுத்ததை அடுத்து, அதன் எப்.எம். சானல்களையும் ஏலத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

பணப்பரிவர்த்தனை மோசடி குற்றச்சாட்டில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் பெயர் இருப்பதால் மத்திய அரசு பாதுகாப்பு அனுமதியை வழங்கவில்லை.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு ரேடியோ சானலில் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அதேபோல கலாநிதி மாறனுக்கு 21.6 சதவீத பங்குகள் மட்டுமே இருக்கிறது என்று வழக்கு விசாரணையின்போது எடுத்துரைக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம் என்று ரெட் எப்.எம். நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நிஷா நாராயண் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது.

எங்களுக்கு பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எந்த காரணமும் இல்லை. நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி இன்று நடக்க இருக்கும் ஏலத்தில் கலந்துகொள்வோம். புதிய அலைவரிசைக்கான ஏலத்திலும் கலந்துகொள்ள இருக்கிறோம்.

வணிக நோக்கத்துக்கான பெரு நகரங்களில் மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்ற இலக்கில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இரண்டாம் கட்ட ஏல முடிவில் வட கிழக்கு பகுதியில் அதிக எண்ணிக்கையில் ரேடியோ நிலையங்களை வைத்திருக்கிறோம்.

நாங்கள் ஏலத்தில் கலந்துகொள்ளும் போது ஆரோக்கியமான போட்டி உருவாகும். இது ஊடக துறைக்கு நல்லது என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT