வணிகம்

ஐபிஓ வெளியிட யூடிஐ மியூச்சுவல் பண்ட் முடிவு

செய்திப்பிரிவு

இந்தியாவின் முன்னணி மியூச்சு வல் பண்ட் நிறுவனமான யூடிஐ மியூச்சுவல் பண்ட் பொது பங்கு வெளியிட (ஐபிஓ) முடிவு செய்திருக்கிறது. அரசாங்கத்தின் (நிதி அமைச்சகத்தின்) அனுமதிக் காக காத்திருக்கிறோம் என்று யூடிஐ மியூச்சுவல் பண்டின் தலைமைச் செயல் அதிகாரி லியோ பூரி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியபோது.

ஐபிஓ வெளியிட முடிவு செய்து மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அனுமதிக்கு பிறகு ஐபிஓ நடைமுறைக்கு வர ஆறு மாத கால அவகாசம் தேவைப்படும் என்றார்.

நிறுவனங்கள் பட்டியலிடும் நடவடிக்கையை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் ஊக்கப்படுத்துகிறது. அதனால் ஐபிஒ வெளியிட செபியின் நடவடிக்கைகளால் காலதாமதம் ஏதும் ஏற்படாது. இப்போது ஐபிஓ வெளியிட நிறுவனங்களுக்கு உதவி செய்வதுடன், அனுமதி அளிப்பதையும் செபி விரைவு படுத்தி வருகிறது.

அதனால் நிதி அமைச்சகத்தின் அனுமதிக்கு பிறகு காலதாமதம் ஏதும் ஏற்படாது என்று நினைக் கிறேன்.

இந்திய சந்தைகள் குறித்து பேசும் போது, இந்திய சந்தைகள் நிதானமான ஏற்றத்தை சந்தித்து வருகிறது. சர்வதேச அளவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் போது இந்திய சந்தையில் அவ்வளவு ஏற்ற இறக்கங்கள் இல்லை. உதாரணத்துக்கு சீனா அல்லது ஐரோப்பா சந்தைகளில் இருக்கும் ஏற்ற இறக்கம் இந்தியாவில் இல்லை.

நீண்டகால முதலீட்டுக்கு இந்திய சந்தை ஏற்றது. நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள், பெரிய அளவில் இந்திய சந்தையில் இருந்து வெளியேறவில்லை. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சிறுமுதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள். இந்திய சந்தை மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இப்போதே சந்தை முதிர் வடைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் பகுதி அளவுக்கு முழுமை அடைந் திருக்கிறது. இன்னும் உயர்வதற்கு சாத்தியங்கள் உள்ளன. இந்தியாவின் அடிப்படை மிகவும் பலமாக இருக்கிறது. இப்போது சந்தை நிலைபெற்று வருகிறது. பருவமழை, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை பொறுத்து சந்தையின் அடுத்தகட்ட போக்கு இருக்கும் என்றார்.

யூடிஐ மியூச்சுவல் பண்ட் இந்தியாவின் பழமையான மியூச்சுவல் பண்ட் நிறுவனம் ஆகும். கடந்த 2008-ம் ஆண்டே ஐபிஓ வெளியிட யூடிஐ திட்டமிட்டது. ஆனால் அப்போதைய சந்தை சூழ்நிலைகள் சரியில்லாததால் அந்த திட்டத்தை கைவிட்டது. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஐபிஓ வெளியிட திட்டமிட்டு வருகிறது.

இந்த நிறுவனம் சுமார் 1,500 கோடி டாலர் சொத்துகளை கையாளுகிறது. இந்தியாவின் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் இந்த மியூச்சுவல் பண்டின் நிறுவனர்கள் ஆகும். எஸ்பிஐ, எல்ஐசி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்களும் இந்த நிறுவனத்தில் தலா 18.5 சதவீத பங்கினை வைத்திருக்கின்றன.

அமெரிக்காவை சேர்ந்த பண்ட் நிறுவனமான டி ரவ் பிரைஸ் (T Rowe Price) யூடிஐ மியூச்சுவல் நிறுவனத்தில் 26 சதவீத பங்கினை வைத்திருக்கிறது.

லியோ பூரி கடந்த இரு வருடங்களாக இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். இதற்கு முன்பு சர்வதேச முதலீட்டு நிறுவனமான வார்பர்க் பின்கஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

ஐபிஓ குறித்து மேலும் தகவல் களை தெரிவிக்காத லியோபூரி, நிறுவனத்தின் இயக்குநர் குழு ஐபிஓ வெளியிட சாதகமாக இருக்கிறது. அதனால்தான் நிதி அமைச்சகத்தை அணுகினோம் என்று தெரிவித்தார். பிடிஐ.

SCROLL FOR NEXT