வணிகம்

டிசிஎஸ் நிகர லாபம் ரூ. 5,684 கோடி

செய்திப்பிரிவு

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியானது. முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் 2.08 சதவீதம் உயர்ந்து ரூ.5,684 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் மொத்த நிகர லாபம் ரூ.5,568 கோடியாக இருந்தது.

சந்தை எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்பவே டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வந்தி ருக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 16.08 சதவீதம் உயர்ந்து ரூ.25,668 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.22,111 கோடியாக நிறுவனத்தின் வருமானம் இருக்கிறது.

முக்கிய சந்தையான வட அமெரிக்காவில் தேவை அதிகரித்து வருகிறது. முக்கிய பிரிவுகளாக நிதிச் சேவைகள், ரீடெய்ல், லைப் சயின்ஸஸ் ஆகிய துறைகளில் முதல் காலாண்டு வளர்ச்சி இருந்ததாக டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.சந்திரசேகரன் தெரிவித்தார். மேலும் தற்போது முக்கியமான துறைகளில் முதலீடுகள் செய்திருக்கிறோம். இவை நடப்பு நிதி ஆண்டில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும் என்றார்.

ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு 5.50 ரூபாய் இடைக்கால டிவிடெண்டாக நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஜூன் காலாண்டில் மொத்தமாக 20,302 நபர்கள் கூடுதலாக பணிக்கு அமர்த்தி இருக்கிறது. ஜூன் 30-ம் தேதி இறுதியில் 3,24,935 பணியாளர்கள் நிறுவனத்தில் இருக்கிறார்கள். இவர்களில் பயன்படுத்தும் விகிதம் 86.3 சதவீதமாக இருக்கிறது. நிறுவனத்தின் வேலை மாறுவோர் விகிதம் 15.9 சதவீதமாக இருக்கிறது. இந்த காலாண்டில் பத்து வாடிக்கையாளர்களை இணைத்திருக்கிறது.

டிஜிட்டலை நோக்கி சந்தை நகர்ந்து வருவதால், அனைத்துத் துறைகளிலும் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் பணியாளர்களுக்கு மேலே பயிற்சி அளிக்கத் திட்டமிட்டிருப்பதாக என்.சந்திரசேகரன் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டில் முதல் டெக்னாலஜி நிறுவனமான டிசிஎஸ் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. பொதுவாக இன்போசிஸ் நிறுவனம்தான் காலாண்டு முடிவுகளை தொடங்கிவைக்கும்.

நேற்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்கு 3 சதவீதம் வரை சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 2.80 சதவீதம் சரிந்து 2,522 ரூபாயில் முடிவடைந்தது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 14,229 கோடி ரூபாய் சரிந்தது. தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 4,93,873 கோடியாக இருக்கிறது.

சந்தை சரிவு

பங்குச்சந்தையின் சரிவு நேற்றும் தொடர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 114 புள்ளிகள் சரிந்து 27573 புள்ளியில் முடிந்தது. நிப்டி 34.50 புள்ளிகள் சரிந்து 34 புள்ளிகள் சரிந்து 8328 புள்ளியில் முடிவடைந்தது.

SCROLL FOR NEXT