கிரீஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடு களில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளால் எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் தெரிவித்துள் ளது. கடந்த வருடத்தின் ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது ஐரோப்பா சார்ந்த வருமானம் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
எங்களைப் பொறுத்தவரை சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையோ கிரீஸில் ஏற்பட்டுள்ள நெருக்கடியோ எங்களை பாதிக்காது என்று டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்.சந்திரசேகரன் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் அனைத்து இடங்களிலும், அனைத்து துறைகளிலும் நாங்கள் வளர்ந்து வருகிறோம். கிரீஸ் மற்றும் சீனா பிரச்சினை முதலீட்டாளர்களுக்கு கவலைதரும் விஷயமாக இருக்கலாமே தவிர எங்களுக்கு அல்ல. தவிர அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் எங்களது முக்கிய வர்த்தகம் இருக்கிறது. இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவிலிருந்து கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவாகும் என்றார்.
வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உயர்ந்திருந்தாலும், டிசிஎஸ் பங்கு 1.91 சதவீதம் சரிந்து முடிந்தது. வியாழன் அன்று வெளியான ஜூன் காலாண்டு முடிவுகள் மீது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தி இருப்பதால் டிசிஎஸ் பங்கு சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 2,474 ரூபாயில் இந்த பங்கு முடிந்தது.
ஏன் வேலை மாறுகிறார்கள்?
டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை மாறுவோர்களின் விகிதம் 15.9 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த 9 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். கடந்த வருடம் இதே காலத்தில் வேலை மாறுவோர் விகிதம் 12 சதவீதமாகதான் இருந்தது.
சமீபகாலமாக இ-காமர்ஸ் உள்ளிட்ட டெக்னாலஜி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. அந்த நிறுவனங்களின் மனிதவள கொள்கைகளும் பணியாளர்களுக்கு வசதியாக இருப்பதால் அந்த நிறுவனங்களுக்கு மாறுகிறார்கள்.
ஆனால் இதனை டிசிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச மனிதவளப்பிரிவு தலைவர் அஜோய் முகர்ஜி மறுத்திருக்கிறார். அவர்கள் செய்யும் வேலை வேறு, அவர்களின் சந்தையில் நாங்கள் இல்லை. எங்கள் பணியாளர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கிறோம் என்றார்.
கடந்த மூன்று மாதத்தில் 15,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். மார்ச் காலாண்டில் போனஸ் அறிவித்த பிறகும் கூட வெளியேறுவோர் விகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த காலாண்டில் 20,302 பணியாளர்களை டிசிஎஸ் பணிக்கு எடுத்திருக்கிறது.