வணிகம்

தொழில் கலாச்சாரம்: பணக்கார தேசத்திலும் வாய்ப்புகள் நமக்குண்டு!

எஸ்.எல்.வி மூர்த்தி

இன்றைய இளைஞர் சமுதாயத்தின் கனவுத் தொழிற்சாலை, ஆதர்ச உலகம் அமெரிக்கா. அதுவும், 2000 மாவது ஆண்டுக்குப் பிறகு, இந்திய, அமெரிக்க உறவுகளில் புதிய பரிணாமங்கள். 2000-மாவது ஆண்டில் Y2K என்னும் கம்ப்யூட்டர் தொடர்பான பிரச்சினை வந்தது. நான்கு இலக்க வருடத்தை இரண்டு இலக்கங்களாகச் சுருக்கும்போது, 2000 என்பது 00 எனக் குறிப்பிடப்படும். இதனால், கம்ப்யூட்டர்கள் 1999 இலிருந்து 2000 ம் ஆண்டுக்குத் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள முடியாமல் திணறின. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டதில் இந்திய சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. நம் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் திறமைகளுக்கு வெளிச்சம் போட 2000- மாவது ஆண்டின் சிக்கல் பெருமளவில் உதவியது.

கூகிள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் என்னும் ஏராளமான அமெரிக்க முன்னணி நிறுவனங் களின் வளர்ச்சிக்கு ஆயிரக்கணக்கான இந்திய இளம் பொறியாளர்களின் திறமை நீரூற்றிக்கொண்டிருக்கிறது. பல அமெரிக்க முன்னணி நிறுவனங்கள் தங்கள் பணிகளை அசென்ச்சர் (Accenture), காக்னிசென்ட், ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற இந்தியக் நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்கிறார்கள். இந்தப் பணிகளுக்காக, நம் பொறியாளர்கள் அடிக்கடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள்.

இந்தத் திறமைசாலிகளில் பலர் அடிமட்ட, மத்தியக் குடும்பங்களின் வார்ப்புகள். தங்கள் பணிகளில் இவர்கள் உச்சம் தொட அசாத்தியத் திறமை மட்டும் போதாது; இந்தியர்கள் என்னும் வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு இருக்கக்கூடாது. அமெரிக்கர்களின் பழக்க வழக்கங்களைப் புரிந்துகொண்டு அவர்களுள் ஒருவராக வாழவேண்டும். வேர்களை இந்தி யாவில் வைத்துக்கொண்டு, கிளைகளை அமெரிக்காவில் பரப்பவேண்டும்.

சாஃப்ட்வேர் தவிர, ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்திலும், இந்திய அமெரிக்க உறவுகள் வலிமையானவை. நம் ஏற்றுமதிப் பட்டியலில் முதல் இடம் பிடிப்பது அமெரிக்காதான் ரூ.2.60 லட்சம் கோடி, இந்திய மொத்த ஏற்றுமதியில் சுமார் 14 சதவீதம். அமெரிக்காவிலிருந்து நம் இறக்குமதி ரூ.1.33 லட்சம் கோடி.

மருந்துகள், ரசாயனங்கள், ஜவுளி பொருட் கள், சிலவகை இயந்திரங்கள், ஆகியவை நம் ஏற்றுமதியில் முக்கியமானவை. நாம் அமெரிக்காவிலிருந்து இயந்திரங்கள், விமானங்கள், பெட்ரோல், மருத்துவக் கருவிகள், எலக்ட்ரானிக் கருவிகள், பிளாஸ் டிக்ஸ், மரக்கூழ் போன்ற பொருட்கள் வாங்கு கிறோம். அமெரிக்கா பற்றிய தெரிந்தும், தெரியாமலும் இருக்கும் விஷயங்கள்:

பூகோள அமைப்பு

அமெரிக்கா ஒரு கண்டம். கனடா, மெக்ஸிகோ ஆகியவை அண்டைய நாடுகள். நிலப்பரப்பு 98,26,675 சதுர கிலோமீட்டர்கள். அதாவது, இந்தியாவைவிட (32,87,263) சுமார் மூன்று மடங்கு பெரியது. நிலக்கரி, செம்பு, ஈயம், யுரேனியம், இரும்பு, நிக்கல், பெட்ரோலியம் என வகை வகையான இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் தேசம்.

மக்கள் தொகை

சுமார் 32 கோடி. நம் ஜனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு. இவர்களில் வெள்ளை யர்கள் 80 சதவீதம்: கறுப்பு இனத்தவர் 13 சதவீதம்; ஆசியர்கள் 4 சதவீதம்; பிறர் 3 சதவீதம். ஆங்கிலம் ஆட்சிமொழி. அடுத்த படியாகப் பெரும்பாலானோர் பேசும் மொழி ஸ்பானிஷ். 51 சதவீதத்தினர் பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள்; 24 சதவிகிதம் கத்தோலிக்கர்கள்; யூதர்கள், புத்த மதத்தினர், இஸ்லாமியர் ஆகியோர் பிறர்.

சுருக்க வரலாறு

கொலம்பஸ் என்னும் இத்தாலி நாட்டுக் காரர் 1492 இல் அமெரிக்காவைக் “கண்டு பிடித்தார்.” அதுவரை அங்கே வசித்த மண்ணின் மைந்தர்கள் பற்றித் தெளிவான விவரங்கள் இல்லை. ஆனால், இவர்கள் “சிவப்பு இந்தி யர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள். 1600 களில் ஸ்பெயின் நாட்டுக்காரர்கள், பிரிட்டிஷார், அடுத்து ஐரோப்பியர்கள் புலம் பெயர்ந்து வந்தார்கள். தேசம் பிரிட்டிஷ் காலனி யானது. 1776 இல் 13 காலனிகளும் இணைந் தன. ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றன. அமெரிக்கா பிறந்தது. காலப்போக்கில் இன்னும் 37 மாநிலங்கள் சேர்ந்தன.

1861 65 காலக் கட்டத்தில் உளநாட்டுப் போர் வந்தது. குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் உறுதியோடு இந்த நிலையைக் கையாண்டு, நாட்டின் ஒருமைப்பாட்டைக் காத்தார். இன்று 50 மாநிலங்களும், வாஷிங்டன் என்னும் மத்திய ஆட்சிப் பிரதேசமும் இருக்கின்றன.

ஆட்சி முறை

மக்களாட்சி நடக்கிறது. உலக ஜனநாயகத் துக்கு வழிகாட்டி அமெரிக்காதான்.

பொருளாதாரம்

உலகின் செல்வாக்குமிக்க பணக்கார நாடு அமெரிக்காதான். முதலாளித்துவக் கொள் கையைப் பின்பற்றுகிறது. தொழில்நுட்பம், தொழில் உத்திகள், மேலாண்மை போன்ற துறைகளில் முன்னோடி. 1930 - களில் ‘பெரும் பொருளாதாரத் தொய்வு” (Great Depression) என்னும் வீழ்ச்சி வந்தது. இன்னொரு வீழ்ச்சி 2008 இல். இவை இரண்டிலிருந்தும் விடுபட்டுத் தன் வளர்ச்சியைத் தொடர்கிறது.

நாணயம்

டாலர். இன்றைய மதிப்பின்படி, ஒரு டாலர் சுமார் 63 ரூபாய்.

பயணம்

அமெரிக்கா விரிந்து பரந்த நாடு. மாநி லத்துக்கு மாநிலம் பருவநிலை மாறுபடும். ஆகவே, போகும் மாநிலத்துக்கு ஏற்ப, விசிட் அடிக்கும் மாதங்களைத் தேர்ந்தெடுங்கள். அமெரிக்கர்கள் விரைவாக முடிவு எடுப்பவர்கள். வெயில், மழை என்று பார்க்காமல், தொழில் தேவைகளுக்கு ஏற்றபடி பயணம் செய்யுங்கள்.

பிசினஸ் டிப்ஸ்

சந்திக்கும் நேரத்தை முன்னதாகவே பேசி நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். இல்லா விட்டால், சந்திக்க மாட்டார்கள். மீட்டிங், சாப்பாட்டு அழைப்புகள் ஆகியவற்றுக்கு நேரம் தவறாமை மிக முக்கியம். பார்ட்டிகளுக்கு அரை மணி நேரம் தாமதமாகப் போகலாம். சில நகரங்களில் டிராஃபிக் ஜாம்கள் சகஜம். இந்த விவரம் ரேடியோவில் தொடர்ந்து ஒலிபரப்பாகும், இதன்படி, மீட்டிங்குக்குப் புறப்படவேண்டிய நேரத்தைத் தீர்மானியுங்கள்.

கோட், சூட் போட்டால் விசித்திரமாகப் பார்ப்பார்கள். ஜீன்ஸ், டி ஷர்ட் அணியலாம். அலுவலகங்களுக்கு பலர் ஷார்ட், டி ஷர்ட்களில் வருவது சர்வ சாதாரணம். மிஸ்டர், சார் என்று அழைப்பது கிடையாது. கம்பெனிச் தலைவரைக்கூட பெயர் சொல்லி அழைக்கலாம். அவர்களும் அப்படித்தான் உங்களோடு பேசுவார்கள். பலமுறை நெருங்கிப் பழகினால் மட்டுமே, குடும்பம், அரசியல், பணம், மத நம்பிக்கைகள் ஆகியவைபற்றிப் பேசலாம். அதுவரை, இந்தச் சமாச்சாரங்கள் நோ, நோ.

சந்திக்கும்போது, ஆண்கள், பெண்கள் இருவரும் கை குலுக்குவார்கள். நெருங்கிப் பழகியவர்கள் கட்டி அணைத்து அன்பைக் காட்டிக்கொள்வார்கள். பழக்கமில்லாதவர் களும் ஹலோ சொல்வார்கள், புன்முறுவல் செய்வார்கள். நீங்களும் செய்வீர்கள் என்று எதிர்பார்ப்பார்கள்.

பேசும்போது, நெருங்கிப்போய் நிற்காதீர் கள். சுமார் இரண்டு அடி இடைவெளி இருப் பதை விரும்புவார்கள். ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் கை கோர்ப்பது அநாகரிகம்.

அமெரிக்கர்களிடம் கைகளை ஆட்டிப் பேசுதல், ‘‘ஓகே”, “தம்ஸ் அப்”, V for Victory போன்ற சைகைகள் அதிகம். இவற்றின் அர்த்தம் உங்களுக்குத் தெரிந்திருப்பது கருத்துப் பரிமாற்றத்துக்கு மிகவும் உதவும்.

ஒருவரை ஒருவர் அடிக்கடி பாராட்டுவார்கள். உங்களிடமும் இதை எதிர்பார்ப்பார்கள்.

மீட்டிங்குகளுக்கு மடிகணினி சகிதம் முழு ஆயத்தமாக வருவார்கள். உங்களிடமும், விரல் நுனியில் விவரங்களை எதிர்பார்ப்பார்கள். மின்னல் வேக முடிவெடுப்பார்கள். முதல் சந்திப்பிலேயே, பெரிய கான்ட்ராக்ட்கள் கையெழுத்திடப்பட்ட அனுபவங்கள் எனக்கு உண்டு. அதே வேகம் உங்களிடமும் வேண்டும்.

சாப்பாட்டுக்கு உங்கள் சகா அழைத்தால், சாதாரணமாக அவர் பில்லுக்குப் பணம் கொடுப்பார். இல்லாவிட்டால், பில் தர இழுபறி கிடையாது. அவரவர் சாப்பாட்டுக்கு அவரவர் பணம் தருவார்கள்.

லஞ்சம் கிடையவே கிடையாது. விலை உயர்ந்த பரிசுகள் தரக்கூடாது. ஆண்களுக்கு ஏற்ற பரிசு டை: பெண்களுக்கு இந்தியக் கைவினைப் பொருட்கள் தரலாம். சென்ட், ஆடைகள் ஆகியவை தரக்கூடாது.

slvmoorthy@gmail.com

SCROLL FOR NEXT