நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மறைமுக வரி வரு மானம் 37.5 சதவீதம் உயர்ந்திருக் கிறது. ஏப்ரல் முதல் ஜூன் காலாண் டில் மறைமுக வரி வருமானம் 1,53,980 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
மறைமுக வரி என்பது சுங்க வரி, உற்பத்தி வரி மற்றும் சேவை வரி ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
இந்த காலாண்டில் உற்பத்தி வரி அபரிமிதமாக உயர்ந்திருக்கிறது. ஜூன் காலாண்டில் 81 சதவீதம் அளவுக்கு உற்பத்தி வரி உயர்ந்திருக்கிறது. 2014-ம் ஆண்டு ஜூன் காலாண்டில் 34,067 கோடி ரூபாயாக இருந்த உற்பத்தி வரி இப்போது 61,661 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
மறைமுக வரி வருவாய் உயர்ந்திருப்பது பொருளாதாரம் மேம்பட்டிருப்பதையே காட்டு கிறது. உற்பத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளில் இருந்தும் மறைமுக வரி வருவாய் அதிக மாகவே கிடைத்திருப்பதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிய வந்திருக்கிறது.
அதேசமயத்தில் மறைமுக வரி வருமானத்தை உயர்த்துவதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகளையும் ஒப்புக்கொண்டுள்ளது. டீசல், பெட்ரோல் மீதான உற்பத்தி வரி அதிகரிப்பு, மோட்டார் வாகனங்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை விலக்கிகொண்டது, சேவை வரியை 12.36 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தியது ஆகிய காரணங்களால் மறைமுக வரி அதிகமாக கிடைத்திருக்கிறது. இந்த நடவடிக்கைகள் எடுக்காததால் கடந்த வருடம் இதே காலத்தில் மறைமுக வரி 14.5 சதவீதமே உயர்ந்திருக்கிறது.
இந்த காலத்தில் சுங்க வரி 20.2 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 39,175 கோடி ரூபாயாக இருந்த சுங்க வரி இப்போது 47,080 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.ஜூன் காலாண்டில் சேவை வரி 16.4 சதவீதம் உயர்ந்து 45,239 கோடி ரூபாய் அரசுக்கு கிடைத்திருக்கிறது.
தொழில் உற்பத்தி குறியீடு குறைவாக இருந்த போதிலும், மறைமுக வரி கூடுதலாக கிடைத் திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயத்தில் நேரடி வரி வருவாயில் (வருமான வரி, கார்ப்பரேட் வரி, சொத்து வரி, பங்கு பரிமாற்ற வரி) பெரிய மாற்றம் இல்லை என்று நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
நடப்பு நிதி ஆண்டில் மறைமுக வரி வசூல் ரூ.6.46 லட்சம் கோடியாகவும், நேரடி வரி வசூல் ரூ.7.98 லட்சம் கோடியும் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.