மேற்கு வங்கத்தில் முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மாநிலத் தலைநகர் கொல் கத்தாவில் நேற்று நடைபெற்ற ``தொழில் புரிவது எளிது’’ அடுத்த கட்டம் நோக்கி என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் மம்தா பானர்ஜி இத்தகைய உறுதியை அளித்தார்.
நடுத்தர, சிறு, குறுந்தொழில் (எம்எஸ்எம்இ) துறை நிறுவனங்கள் உள்பட 38 தொழில்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கப்படும். வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு உள்ளிட்டவற்றுக்கு அரசு ஒரு போதும் துணை நிற்காது என்ற உறுதிமொழியோடு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கை மற்றும் புதிய ஆலைகள் அமைக்கும் முயற்சி களை மேற்கொண்டுள்ளார் மம்தா.
மாநிலத்தில் தொழில் முதலீடு களை ஈர்ப்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தொழில் துறையினருக்குத் தேவைப்படும் அனைத்து ஒப்புதல் சான்றிதழ்களை அனைத்து துறைகளும் உடனடி யாக வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக அவர் கூறினார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் மேற்கு வங்க மாநிலம் 2011-ம் ஆண்டில் 17-வது இடத்தில் இருந்தது. அதிலிருந்து தொழில் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து 38 தொழில்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வேலை நிறுத்தப் போராட்டம், கதவடைப்பு உள்ளிட்ட நடவடிக் கைகள் மாநிலத்தின் சகஜ வாழ்க்கையை வெகுவாகப் பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனது அரசு இதை முழுவதும் எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார்.
நிறுவனங்கள் மின் இணைப்பை பெறுவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும். இதற்கென விண்ணப்பித்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டார். 15 நாள்களில் அனைத்து அனுமதியும் கொடுக் கப்படும் என்றார். மொத்தம் 49 தொழில்கள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இத்த கைய நிறுவனங்களுக்கு சுற்றுச் சூழல் சான்று பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேபோல 30 நாள்களில் சுற்றுச் சூழல் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு என்ற பிரிவில் வரும் இந்த நிறுவனங்களுக்கு 30 நாளில் அனுமதி அளிக்கப்படும்.
ரசாயனம் மற்றும் ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளுக்கு 60 நாள்களுக்குள் அனுமதி அளிக்க காலக் கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பெரிய நிறுவனங்களை ஈர்க்கும் விதமாக சிறு, குறு மற்றும் நடுத்த ரக தொழில் நிறுவனங்களை (எம்எஸ்எம்இ) ஊக்குவிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 15 நாள்களில் எவ்வித முன் நிபந்தனையும் இன்றி தொழில் துறை லைசென்ஸ் வழங்கப்படும். அதன் பின்னர் தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் பற்றிய ஆவணங்களை தாக்கல் செய்தால் போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜவுளித்துறை திட்ட முதலீடு ரூ. 37 ஆயிரம் கோடி
ஒருங்கிணைந்த ஜவுளி மேம்பாட்டு திட்டப் பணிக்கான முதலீடு ரூ. 37 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மம்தா குறிப்பிட்டார். கடந்த 29-ம் தேதி இத்திட்டத்துக்கான முதலீடு ரூ. 26,100 கோடி என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒருங்கிணைந்த ஜவுளித் திட்டம் மூலம் 6 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று குறிப்பிட்டார். அரசு, தனியார் ஒத்துழைப்போடு (பிபிபி) அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இத்திட்ட மேம்பாட்டுக்கு செலவாகும் தொகை ரூ. 9,159 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.