மோசடி திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் அதிகரித்ததற்கு இங்கு கண்காணிப்பு அமைப்புகள் போதிய அளவு இல்லாததே என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ். முந்த்ரா குற்றம் சாட்டினார். மேலும் இங்குள்ள கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், அமலாக்கத்துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பு இல்லாததும் இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
சுங்கம், உற்பத்தி மற்றும் போதைப் பொருள் தடுப்பு ஆகியவற்றுக்கான ஒருங் கிணைந்த தேசிய பன்முக பொருளாதார புலனாய்வு கல்வி மையம் (என்ஏசிஇஎன்) மற்றும் எம்டிஎஸ்இஐ இணைந்து நடத்திய கருத்தரங்கில் பேசுகையில் அவர் இத்தகவலை தெரிவித்தார்.
பொன்சி திட்டங்கள் எனப் படுபவை ஏமாற்றும் நிதித் திட்டங்களாகும். மக்கள் செய்யும் முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை கூறி ஏமாற்றி நிதி திரட்டுகின்றனர்.
இதுபோன்ற மோசடி நிதி நிறுவனங்கள் பெருமளவில் அதிகரித்ததற்கு போதிய கண் காணிப்பு அமைப்புகள் இல்லா ததே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதுபோன்று மோசடி நிதி நிறுவனங்கள் எந்த அமைப்பின் கீழ் வரும் என்பது தெளிவில்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். இதைப் பயன்படுத்திக் கொண்டு தான் மோசடி நிறுவனங்கள் காளான்களைப் போல பெருகி விட்டன என்று அவர் குற்றம் சாட்டினார்.
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை, நிதி முதலீடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது, முதலீடுகளை சேமிக்க உரிய வழிவகை தெரியாதது ஆகியனவே இதுபோன்ற நிறுவ னங்கள் பெருகியதற்கு முக்கியக் காரணம் என்று முந்த்ரா கூறினார்.
இதுபோன்ற ஏமாற்று நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் போட்டு ஏமாந்து முடங்கியுள்ள நிதி ரூ. 80 ஆயிரம் கோடி என்று சமீபத்தில் சிபிஐ இயக்குநர் அனில் சின்ஹா கூறியதையும் முந்த்ரா சுட்டிக் காட்டினார்.
உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களிடம் நிதி திரட்டுவது என்பது 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் அதிகம் நடைபெறுவதாக முந்த்ரா கூறினார். இதைத் தடுப்பதில் மாநில அரசுகள், விசாரணை அமைப்புகள், உள்ளூர் அரசு நிர்வாகத்துக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார் அவர்.