கட்டுமானம் உள்ளிட்ட தேவையான துறைகளில் அரசாங்கம் முதலீடு செய்துவருகிறது. கொள்கை முடிவுகளை வேகமாக எடுக்கிறது, பொருளாதார சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது, இந்த சூழ்நிலையில் பருவமழையும் சிறப்பாக இருந்தது என்றால் 10 சதவித வளர்ச்சி என்பது எட்ட முடியாதது அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
9 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிருக்கும் அவர், அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்ட்டியூட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில் இவ்வாறு கூறினார். இந்தியாவின் இரட்டை இலக்க வளர்ச்சிபாதை என்பதை மையமாக வைத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் அமெரிக்க சிந்தனையாளர்களிடம் ஜேட்லி உரையாற்றினார்.
அவர் மேலும் கூறியதாவது:
10 சதவீத வளர்ச்சி என்பது இந்தியாவுக்கு சாத்தியமானது தான். இந்த இலக்கை எட்ட முடியும், ஆனால் அதைவிட முக்கியம் அந்த இலக்கை தொடர்ந்து தக்க வைத்துகொள்ளது. பத்து சதவீத வளர்ச்சியை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு நேரடியாக பல நன்மைகள் உருவாகும். வளர்ச்சி அதிகரிக்கும் போது வேலைவாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கும்போது அடுத்த பத்து வருடங்களில் இந்தியாவில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.
உடனடியாக எவ்வளவு வளர்ச்சி அடைய முடியும் என்பதைக் கணிக்க முடியாது. ஆனால் தற்போது இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கிறது. இது இந்தியாவின் திறனுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை என்பதை மட்டும் உறுதியாக கூறமுடியும். நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சியை தொடுவோம்.
மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் புதிய கொள்கைகள் முதலீடுகளை அறிவித்திருக்கிறது. இவற்றின் தாக்கம் சந்தையில் பிரதிபலிக்கும்போது வளர்ச்சியில் சிறிது ஏற்றம் இருக்கும்.
தற்போது பணவீக்கம் குறைவாக இருக்கிறது. இதே நிலை தொடரும்போது வட்டி விகிதம் குறையும். வட்டி விகிதம் குறைவது இந்திய பொருளாதாரத்துக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். தற்போது இருக்கும் சாதகமான சூழ்நிலைகள் ஒன்றாக சேரும்போது 8 முதல் 10 சதவீத வளர்ச்சி என்பது முடியாத செயல் அல்ல என்றார்.
உற்பத்தி துறை
இந்திய உற்பத்தி துறை மிகவும் மந்தமான சூழ்நிலையில் உள்ளது. இந்த துறையின் வளர்ச்சி விகிதம் 10 சதவீதம் என்ற நிலையில் இருக்கிறது. இப்போது இந்தத் துறையில் அதிக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் இந்த துறையின் வளர்ச்சியில் கணிசமான முன்னேற்றம் இருக்கும்.
`மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் உற்பத்தி துறையில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் கிராமப்புற பகுதியில் உள்ள சிறுகுறு நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் நிலக்கரி சுரங்க ஏலம் உள்ளிட்ட காரணங் களால் உற்பத்தி துறையில் நடப் பாண்டில் கணிசமான வளர்ச்சி இருக்கும் என்றார்.
பருவமழை
நடப்பாண்டில் பருவமழை சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதனால் விவசாயத் துறையின் வளர்ச்சி அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அடுத்த நிதி ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட இருக்கிறது. இதனால் நாட்டின் வளர்ச்சி குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வரை உயர வாய்ப்பு இருக்கிறது.
நிதிப்பற்றாக்குறை அதிகபட்சமாக 6 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. அதை நாங்கள் 4 சதவீதமாகக் குறைத்திருக்கிறோம். நடப்புக் கணக்கு பற்றாக்குறை 0.2 சதவீதமாக இருக்கிறது. இந்த தகவல்கள் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. பல விஷயங்கள் அரசாங்கம் செய்து வந்தாலும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன.
நிலம் கையகப்படுத்தும் மசோதா சவாலாக இருக்கிறது. இது குறித்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இந்த மசோதா கிராமப்புற பகுதி மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும். இதுதவிர இன்னும் பல சீர்த்திருத்தங்கள் வரிசையாக உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று ஜேட்லி தெரிவித்தார்.