சன் குழுமத்தின் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. இதன் காரணமாக இந்த சேனல்களின் ஒளிபரப்பு உரிமை ரத்தாகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மத்திய உள் துறை அமைச்சகத்தின் இந்த முடிவு சன் குழுமத்துக்கு பெரும் பின் னடைவை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக சன் குழுமத்தின் 40 பண்பலை வானொலி ஒலிபரப்புக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய அரசு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் ராஜ்நாத் சிங் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
இதுகுறித்து தகவல் ஒலிபரப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது இதற்கான கடிதம் வெள்ளிக்கிழமை வந்தாக தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகம் இந்த சேனல்களின் உரிமத்தை ரத்து செய்யவும், ஒளிபரப்பை நிறுத்தவும் அருண் ஜேட்லிக்கு (தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர்) பரிந்துரை கடிதம் அனுப்ப திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
இந்தியாவின் பெரிய தொலை காட்சி குழுமங்களில் சன் குழுமமும் ஒன்று. இந்த குழுமத்துக்கு 9.5 கோடி பார்வையாளர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்த குழுமத்தின் 33 சேனல்களுக்கு உரிமத்தை அடுத்த பத்து வருடங்களுக்கு புதுப்பிக்க கடந்த வருடம் விண்ணப்பித்திருந்தது. தற்போதைய முடிவினை எதிர்த்து சன் குழுமம் வழக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.