வணிகம்

கார் விற்பனை 7% உயர்வு: பைக் விற்பனையில் தேக்கம்

பிடிஐ

கார் விற்பனை தொடர்ந்து 7-வது மாதமாக மே மாதத்தில் 7.73 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் இரு சக்கர வாகன விற்பனை மே மாதத்தில் 3 சதவீதம் சரிந்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற் பத்தியாளர் சங்கம் (எஸ்ஐஏஎம்) வெளியிட்ட அறிக்கையில், பைக் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவு கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் மொத்தம் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 1,60,067 ஆகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1,48,577 கார்கள் விற்பனையாகியுள்ளது. கார் விற்பனை அதிகரித்துள்ளது நல்ல அறிகுறியாகத் தெரிகிறது. அதேசமயம் மோட்டார் சைக்கிள் மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளது கிராமப்புற பொருளாதாரத்தில் மீட்சி ஏற்படவில்லை என்பதையே காட்டுவதாக எஸ்ஐஏஎம் இயக்குநர் ஜெனரல் விஷ்ணு மாத்துர் தெரிவித்துள்ளார்.

மே மாதத்தில் மொத்தம் 9,53,322 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டு இதே காலத்தில் மொத்தம் விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை 9,83,210 ஆகும்.

இதே காலகட்டத்தில் இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற் பனையும் 7.19 சதவீதம் சரிந்துள் ளது. மொத்தம் 28,266 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 30,414 வாகனங்கள் விற்பனையானது.

இலகு ரக வர்த்தக வாகனங்களை (எல்சிவி) பொருத்தமட்டில் 2014-ம் ஆண்டு செப்டம்பரில் மட்டுமே சிறிதளவு ஏற்றம் காணப்பட்டது. மற்றபடி 25 மாதங்களாக இப்பிரிவு வாகன விற்பனை தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது.

மே மாதத்தில் மாருதி சுஸுகி கார் விற்பனை 14.29 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 85,190 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இதேபோல ஹூண்டாய் மோட்டார் நிறுவன கார் விற்பனை 3.8 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 37,328 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்தது.

ஹோண்டா நிறுவன கார் விற்பனை 8 சதவீதம் சரிந்ததில் மொத்தம் 12,134 கார்களையே இந்நிறுவனம் விற்பனை செய்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவன விற்பனை 32 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 9,176 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்தது. இதேபோல மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன விற்பனை 4.77 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 16,980 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன விற்பனை மே மாதத்தில் 3.04 சதவீதம் சரிந்ததில் மொத்தம் 5,09,427 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் மொத்தம் 5,25,449 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

பஜாஜ் நிறுவன விற்பனையும் மே மாதத்தில் 3.18 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 1,76,277 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவன விற்பனை 9 சதவீதம் சரிந்ததில் மொத்தம் 1,38,150 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

ஸ்கூட்டர்கள் விற்பனை 2.61 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 3,64,073 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

SCROLL FOR NEXT