பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ. 8 ஆயிரம் கோடியை அரசு முதலீடு செய்ய உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் வங்கிகள் தங்களது மூலதன வரம்பை அதிகரித்துக் கொள்வதற்காக இந்த முதலீடு செய்யப்படுவதாக மத்திய நிதி சேவைத்துறைச் செயலர் ஜி.எஸ். சாந்து தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய அவர், இடைக்கால பட்ஜெட்டில் வங்கிகளுக்கு ரூ. 11,200 கோடி ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் வங்கிகளின் கூடுதல் தேவையை பூர்த்தி செய்வதற்காக ரூ.6 ஆயிரம் கோடி முதல் ரூ. 8 ஆயிரம் கோடி வரை ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார். மத்தியில் அமைய உள்ள புதிய அரசு இது தொடர்பாக முடிவெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேசல்-3 விதிமுறைகளின்படி வங்கிகள் தங்களது பிரிவு 1 மூலதன வரம்பை அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளன.சர்வதேச வங்கி விதிகளின்படி இந்திய வங்கிகள் தங்களது மூலதன வரம்பை அதிகரித்துக் கொள்ள ரூ. 5 லட்சம் கோடி தேவைப்படும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.