இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கார்ப்பரேஷனுக்கு (ஐடிடிசி) சொந்தமான நஷ்டத்தில் செயல்படும் 8 ஹோட்டல்களை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஹோட்டல்களின் சொத்துகள் மதிப்பீடு செய்யப்பட்டு ஆர்வமுள்ள முதலீட்டாளருக்கு விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சுற்றுலா அமைச்சக அதிகாரிகளும் அரசு பங்கு விலக்கல் துறை அதிகாரிகளும் விரைவில் சந்தித்து இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்போது விற்பனை செய்வது, மதிப்பீடு மற்றும் எந்த வகையில் விற்பனை உரிய முதலீட்டாளருக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு அதற்குரிய வழிகாட்டுமுறைகள் வகுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ. 28,500 கோடியை நடப்பு நிதி ஆண்டில் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பொதுத்துறை பங்குகளில் ஒரு குறிப்பிட்ட அளவை விற்பதன் மூலம் ரூ. 41 ஆயிரம் கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ஐடிடிசி நிர்வா கத்தின் கீழ 15 ஹோட்டல்கள் அசோகா குழும ஹோட்டல்கள் என்ற பெயரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுகின்றன.
இதில் நஷ்டத்தில் இயங்கும் 8 ஹோட்டல்களின் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பட்டியலிடப்படாத இந்த ஹோட்டல்களை மதிப்பீடு செய்வது பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த ஹோட்டல்களின் மதிப்பை சரியாக மதிப்பீடு செய்ய ஒரு மதிப்பீட்டாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டல்களை அவசர கதியில் விற்பனை செய்யாமல் உரிய விலை கிடைக்கும் வரை காத்திருந்து விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2002-02-ம் ஆண்டு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது 8 ஐடிடிசி ஹோட்டல்கள் விற்பனை செய்யப்பட்டன.