பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 47.88 புள்ளிகள் குறைந்து 24,303 புள்ளிகளாகவும், நிப்டி 15.02 புள்ளிகள் குறைந்து 7,252.70 புள்ளிகளாகவும் உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நடந்துவந்த வேளையில், நரேந்திர மோடி தலைமையில் பாஜக கூட்டணி, மத்தியில் நிலையான ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருவதால் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. இதனால் சந்தையின் நிலவரம் கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தில் இருந்தது. நிலையான ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் பங்குகளை வாங்கினர்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, பிரதமராக மோடி தேர்வாகியுள்ள நிலையில் ஏற்றத்தில் இருந்து வந்த பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்ததால் நேற்று மாலை முதலே சந்தை சமநிலைக்கு வந்தது. இதன் தொடர்ச்சியான வெளிப்பாடாக இன்று காலை வர்த்தகம் சரிவில் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 47.88 புள்ளிகள் குறைந்து 24,303 புள்ளிகளாகவும், நிப்டி 15.02 புள்ளிகள் குறைந்து 7,252.70 புள்ளிகளாகவும் உள்ளது. தொடர்ந்து இதே நிலையில் பங்குசந்தை சரிந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் என்று சந்தை ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே போல, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 13 காசுகள் குறைந்து 58.76 ஆக உள்ளது.