தடை விதிக்கப்பட்ட மேகியை 35 லட்சம் சில்லரை வர்த்தக நிறுவனங்களிலிருந்து திரும்பப் பெறும் பணியை நெஸ்லே நிறுவனம் தீவிரமாக்கியுள்ளது. மொத்தம் 27 ஆயிரம் டன் மேகியை திரும்பப் பெற வேண்டியுள்ளது. இவற்றை திரும்பப் பெற்று அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு 10 ஆயிரம் லாரிகள் தேவைப்படும். மேகியை தீயிட்டு அழிக்க 6 சிமென்ட் ஆலைகள் தேவைப்படும்.
கையிருப்பில் உள்ள நூடுல் ஸை அழிக்க 40 நாள்கள் தேவைப் படும் என நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதியிலிருந்து சந்தையில் மேகி நூடுல்ஸ் தயாரிப்புகளை திரும்பப் பெறும் பணியை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தப் பணியில் 1,600 பேர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் விற்பனைப் பிரதி நிதிகள் உள்ளிட்டோர் தவிர நெஸ்லே விநியோகஸ்தர்கள் 12 ஆயிரம் பேர் மேகியை திரும்பப் பெறும் பணியில் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர்.
நெஸ்லே நிறுவனம் தொடங் கப்பட்ட 100 ஆண்டுகளில் இதுவரை இந்த அளவுக்குப் பொருள்களை திரும்பப் பெற்று அழிக்கும் பணியை அந்நிறுவனம் மேற்கொண்டதில்லை.
நெஸ்லேயின் தாயகம் ஸ்விட்சர் லாந்தாகும். இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மொத்தம் 27,420 டன் மேகியை திரும்பப் பெற வேண்டியுள்ளது. இதன் மதிப்பு ரூ.320 கோடியாகும்.
மொத்தம் உள்ள 27,420 டன் மேகியில் நெஸ்லே நிறுவனத்தின் 5 உற்பத்தி ஆலைகளில் 1,422 டன் உள்ளது. இவை அனைத்தும் தற்போது மேகி நூடுல்ஸ் உற்பத்தியை நிறுத்திவிட்டன. 38 விநியோக மையங்களில் 8,975 டன் மேகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர விநியோகஸ்தர்கள் வசம் 7,000 டன் உள்ளது. இது தவிர 10,020 டன் மேகி சில்லரை வர்த்தகர்களிடம் உள்ளது. இதை நெஸ்லே நிறுவனம் கண்டறிந்து அவற்றை திரும்பப் பெறும்.
இவை அனைத்தும் மொத்தம் 40 லட்சம் அட்டைப்பெட்டிகளில் உள்ளன. ஒரு அட்டைப் பெட்டியில் 70 கிராம் பாக்கெட் 96 பாக்கெட்டுகள் உள்ளன. 35 லட்சம் சில்லரை வர்த்தகக் கடைகளில் 15 லட்சம் கடைகள் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளவையாகும்.
இவை அனைத்தையும் திரும்பப் பெற்று அழிப்பது என்பது மிகப் பெரிய பணியாகும் என்று நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் லுகா பிசெரா தெரிவித்துள்ளார். இவற்றை கொண்டு வருவதற்கு 10 ஆயிரம் லாரிகள் தேவைப்படும் என அவர் தெரிவித்தார்.
நிறுவனத்துக்குச் சொந்தமான 38 விநியோக மையங்களில் உள்ள கிடங்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடத்தை திரும்பப் பெறும் மேகியை வைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்விதம் திரும்பப் பெறும் மேகி அனைத்தும் மறுபடியும் பேக் செய்யப்பட்டு பிறகு உலையில் கொட்டி அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திரும்பப் பெறும் மேகி முழுவதையும் வைக்க போதிய இட வசதி கிடையாது. இதற்காக மேலும் கூடுதலாக 12 கிடங்குகள் அடையாளம் காணப்பட்டு அங்கு வைக்கப்படுகின்றன.
கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நெஸ்லே நிறுவனம் 169 டன் மேகியை அழித்துள்ளது. இவை அனைத்தும் சிமென்ட் ஆலைகளில் கொட்டி எரித்து அழிக்கப்பட்டுள்ளன. நூடுல்ஸ் அனைத்தும் பொடியாக்கப்பட்டு அத்துடன் எரிபொருள் சேர்க் கப்பட்டு உலையில் கொட்டி எரித்து அழிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் சூழல் பாதிப்பும் கவனத்தில் கொள்ளப்பட்டுள் ளதாக பிசெரா தெரிவித்தார்.
மொத்த மேகியையும் அழிக்க 6 சிமென்ட் ஆலைகளை நெஸ்லே நிறுவனம் பயன் படுத்திக் கொள்ளத் திட்டமிட் டுள்ளது. அழிக்கும் பணி தொடங்கும்பட்சத்தில் இந்த ஆலைகள் நாளொன்றுக்கு 700 டன் மேகியை அழிக்கும். இதன்படி கையிருப்பில் உள்ள 27 ஆயிரம் டன் மேகியை அழிக்க 40 நாள்கள் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி வரை சில்லரை விற்பனை கடைகளிலிருந்து 5,635 டன் மேகியை திரும்பப் பெற்றுள்ளது. கையிருப்பில் உள்ள மேகியின் மதிப்பு ரூ. 210 கோடி எனவும், மேகி நூடுல்ஸ் சார்ந்த பிற பொருள்களின் மதிப்பு ரூ. 110 கோடி எனவும் மொத்தம் ரூ. 320 கோடி மதிப்பிலான பொருள்கள் திரும்பப் பெறப்படும் என நெஸ்லே தெரிவித்துள்ளது.
ஆனால் இவற்றைத் திரும்பப் பெறுவது, கிடங்கிலிருந்து சிமென்ட் ஆலைக்குக் கொண்டு செல்வதற்கு லாரிகளை பயன் படுத்துவது, ஆலையில் தீயிட்டு அழிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அதிகம் செலவாகும் என தெரிகிறது.