ஏர் ஏசியா நிறுவனம் ஜூன் 12-ம் தேதி இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்குகிறது. பெங்களூரிலிருந்து கோவாவுக்கு முதலாவது விமானத்தை இயக்குகிறது. அறிமுக சலுகையாக வரி உள்பட கட்டணம் ரூ. 990 என நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கமான விமான கட்டணம் ரூ. 5 ஆயிரமாகும்.
தொடக்க நாள் பயணத்துக்கான டிக்கெட் விற்பனை வெள்ளிக்கிழமை இணையதளம் மூலம் தொடங்கியது. இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் விமானத்தில் பயணிக்கும் அனுபவத்தை அளிக்க வேண்டும் என்பதே தங்கள் நிறுவனத்தின் பிரதான நோக்கம் என்று இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி மிது சாண்டில்யா தெரிவித்தார்.
நிறுவனத்தின் கட்டண விவரம் ஏற்கெனவே சந்தையில் உள்ளதைக் காட்டிலும் 35 சதவீதம் குறைவாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 12-ம் தேதி பெங்களூரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படுகிறது ஏர் ஏசியா விமானம். கோவாவிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு பெங்களூரை வந்தடையும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இப்போதைக்கு மும்பை, டெல்லி இடையே விமானங்களை இயக்கும் செயல்திட்டம் ஏதும் இல்லை என்று அவர் கூறினார். நடப்பு நிதி ஆண்டில் 10 விமானங்கள் மூலம் 10 நகரங்களிடையே விமான சேவையைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
நான்கு மாதங்களில் லாபமீட்டத் தொடங்கும் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டில் இப்போது எவ்வித மாற்றமும் இல்லை என்று சாண்டில்யா கூறினார். விமான போக்குவரத்துக்கு கட்டமைப்பு வசதி மிகப் பெரும் இடையூறாக உள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு 15 சிறிய விமான நிலையங்களை அமைக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் ஏ 320 ரக விமானங்கள் இறங்குவதற்கு வசதியாக நீண்ட ஓடுதளம் கொண்ட விமான நிலையங்கள் தேவை என்று அவர் கூறினார்.
ஏர் ஏசியா நிறுவனம் விமான கட்டணத்தை குறைத்துள்ளதால் இப்பிரிவில் விமான சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் தங்களது கட்டணத்தை ஜூன் 12 முதல் குறைப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. குறைந்த கட்டண விமான சேவையை செயல்படுத்தும் கோலாலம்பூரைச் சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனம் இந்தியாவில் டாடா சன்ஸ் மற்றும் அருண் பாட்டியாவின் டெல்ஸ்ட்ரா டிரேட்பிளேஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த கூட்டுத் திட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு ரூ. 81 கோடியாகும். விமான சேவையைத் தொடங்குவதற்கான அனுமதி கேட்டு 9 மாதங்களுக்குப் பிறகே அது கிடைத்துள்ளது.