சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த பத்ம வாரியர் அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டு ஆலோசகராக மாற்றப்பட்டிருக்கிறார். இந்தியாவில் பிறந்த இவர், சிலிக்கான் பள்ளத்தாக்கில் முக்கியமான பெண் அதிகாரி ஆவர்.
புதிதாக பொறுப்பேற்ற தலைமை செயல் அதிகாரி சக் ராபின்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் பல மாற்றங்களை மேற்கொண்டார். அதில் பத்மஸ்ரீ வாரியரின் மாற்றமும் ஒன்றாகும். உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளி யிட்டது. அதில் பத்மஸ்ரீ வாரியரும் இடம்பெற்றார். அந்த பட்டியலில் 84-வது இடத்தில் இருந்தார்.
இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், நிறுவ னத்தின் மாற்றங்கள் முழுமையாக நடக்கும் (செப்டம்பர் மாதம்) வரை இந்த புதிய பொறுப்பில் வாரியர் இருப்பார் என்று சிஸ்கோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நிறுவனத்தின் செய்யப்பட்ட மாற்றத்தில் 10 புதிய நபர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் இந்தியாவில் பிறந்த பங்கஜ் படேலும் அந்த 10 நபர் குழுவில் இருக்கிறார்.
செயல் துணைத்தலைவர் மற்றும் தலைமை மேம்பாட்டு அலுவலராக (சிடிஓ) பங்கஜ் படேல் இருப்பார். பத்மஸ்ரீ வாரியர் 2008-ம் ஆண்டு சிஸ்கோ நிறுவனத்தில் இணைந்தார். ஐஐடி டெல்லி மற்றும் கார்நெல் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.