கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் அளிக்க வேண்டிய ரூ. 6 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை அரசே நேரடியாக அளிக்க முன்வந்துள் ளது. இந்தத் தொகை வட்டியில்லா கடன் தொகையாக சர்க்கரை ஆலைகளுக்கு அளிக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. இந்த வட்டியில்லா கடன் தொகையை கரும்பு ஆலைகள் ஓராண்டுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2013-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு இதுவரை சர்க்கரை ஆலைகளுக்கு மூன்று முறை கடன் உதவி அளித்துள்ளது.
நடப்பு கரும்பு அறுவை சீசனில் (அக்டோபர் 2014-செப்டம்பர் 2015) சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 21 ஆயிரம் கோடியாகும். இதில் உத்தரப் பிரதேச மாநில ஆலைகள் மட்டும் அளிக்க வேண்டிய தொகை ரூ. 9 ஆயிரம் கோடியாகும்.
கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு நேரடியாக அளிக்க முடிவு
நிலுவைத் தொகையை விவசாயிகள் விரைவாகப் பெற வசதியாக இத்தொகையை வங்கிகள் மூலம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சர்க்கரை ஆலைகள் அளிக்க வேண்டிய நிலுவை தொகை குறித்த விவசாயிகள் பட்டியலை வங்கிகள் பெற்று வங்கிகள் அத்தொகையை விவசாயிகள் கணக்கில் சேர்க்கும். இதில் எஞ்சியிருக்கும் தொகை அந்தந்த கரும்பு ஆலைகள் கணக்கில் வைக்கப்படும்.
இந்த வட்டியில்லா கடன் தொகையானது விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தை அளித்துள்ள சர்க்கரை ஆலைகளுக்கு மட்டும் வழங்கப்படும். இந்த கணக்கீட்டுக்கு ஜூன் 30-ம் தேதி அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும்.
நிலுவை அதிகரித்தது ஏன்?
கரும்பு விவசாயிகளுக்கு கடன் நிலுவை அதிகரித்தற்கு முக்கிய காரணமே, மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசுகள் நிர்ணயிக்கும் விலை ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளிதான்.
மேலும் உள்நாட்டு நுகர்வைக் காட்டிலும் கரும்பு உற்பத்தி அதிகரிப்பும் நிலுவைத் தொகை அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக சர்க்கரை விலை உயர்த்தப்படவில்லை. சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை உயரவில்லை. இதனால் சர்க்கரை ஆலைகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளன.
மத்திய அரசு தலையீடு
கடந்த ஆண்டு மத்திய அரசு தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டது. முதல் கட்டமாக இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீதான சுங்க வரியை 15 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தியது. 5 சதவீதம் எத்தனால் தயாரிப்பை கட்டாயமாக்கியது. அத்துடன் எத்தனாலுக்கு அதிக விலை நிர்ணயித்தது. மேலும் எத்தனால் மீதான உற்பத்தி வரியை அரசு நீக்கியது.
2013-ம்ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு ரூ. 6,600 கோடியை வட்டியில்லாத கடனாக அளித்தது. 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ. 4,400 கோடியை அளித்தது. தற்போது ரூ. 6 ஆயிரம் கோடி அளிக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியாவில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, பிஹார், குஜராத், ஹரியாணா, உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரும்பு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
‘இதனால் பலன் இல்லை’
அரசு அளிக்க முன்வந்துள்ள ரூ. 6 ஆயிரம் கோடி வட்டியில்லாத கடன் தொகையால் எவ்வித பலனும் கிடைக்காது என்று இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (ஐஎஸ்எம்ஏ) தெரிவித்துள்ளது.
ஓராண்டுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த சலுகைக் கடனால் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய கடன் நிலுவைத் தொகை ரூ. 21 ஆயிரம் கோடியாகும் என்று சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் அவினாஷ் வர்மா தெரிவித்துள்ளார். இப்போது அளிக்க ஒப்புக் கொண்டுள்ள ரூ. 6 ஆயிரம் கோடி கடன் போக மீதம் ரூ. 15 ஆயிரம் கோடி நிலுவை இருக்கும்.
ஓராண்டில் ரூ. 6 ஆயிரம் கோடியை திரட்டும் அளவுக்கு சர்க்கரை ஆலைகள் வலுவான நிதி ஆதாரத்துடன் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
உற்பத்தி விலையை விட கிலோவுக்கு ரூ. 10 குறைவான விலையில் சர்க்கரை விற்கப்படும் பட்சத்தில் லாபம் என்பது சாத்தியமில்லாமல் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்ற கடன் தொகையை இந்திய உணவுக் கார்ப்பரேஷன் (எப்சிஐ), எம்எம்டிசி, எஸ்டிசி, ஏபிஇடிஏ போன்ற அமைப்புகளுக்கு வழங்கியிருந்தால் அவையாவது கையிருப்பில் உள்ள 30 லட்சம் சர்க்கரையை கொள்முதல் செய்ய உதவியாக இருக்கும்.
இதன் மூலம் ஆலைகளில் இருப்பில் உள்ள சர்க்கரை அளவு குறையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.