இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி ஏடிஎம்களில் காகித பயன்பாட்டினை குறைக்க முடிவெடுத்திருக்கிறது. இதன்படி ஏடிஎம்களில் பணம் எடுத்த பிறகு எந்தவிதமான தகவல்களும் காகிதம் மூலம் பெறமுடியாது.
அனைத்து விவரங்களும் எஸ்எம்எஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த முயற்சி தற்போது சில ஏடிஎம்களில் பரிசோதனை முயற்சியாக செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் வங்கியின் அனைத்து ஏடிஎம்களிலும் இம்மாத இறுதிக்குள் இத்திட்டம் நடைமுறைக்கு வரும். புதிய திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வரை மீதமாகும்.
ஒரு வேளை வேறு வங்கியின் வாடிக்கையாளர்கள் ஹெச்டிஎப்சி ஏடிஎம் பயன்படுத்தும் போதும் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமே தகவல் தெரிவிக்கப்படும். காகிதம் மூலம் தகவல் வராது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். ஹெச்டிஎப்சி வங்கிக்கு 11,700 ஏடிஎம்கள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு மாதமும் 2 கோடி முறை பணம் எடுக்கப்படுகிறது.