எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாட்டினை 10,000 மெகாவாட் அளவுக்குக் குறைக்க முடியும் என்று மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இதன் மூலம் 200 கோடி டாலர் அளவு சேமிக்க முடியும் என்று கோயல் தெரிவித்தார்.
பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கோயல் இவ்வாறு தெரிவித்தார். அவர் அளித்த பதில்களின் தொகுப்பு.
வீடுகள் மற்றும் தெரு விளக்குகளுக்கு எல்இடி விளக்குகளை பொறுத்துவதன் மூலம் வரும் 2019-ம் ஆண்டில் 10,000 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் 200 கோடி டாலர் சேமிக்க முடியும். தவிர, நட்சத்திர குறியீடு உள்ள மின் சாதன பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, தொழிற்சாலைகளிலும் மின்சார சேமிப்பில் அரசு கவனம் செலுத்த இருக்கிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு 10,000 கோடி யூனிட் மின்சார பயன்பாட்டினை குறைக்க முடியும். இது இந்தியாவின் ஒட்டு மொத்த நுகர்வில் 10 சதவீதமாகும்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 67 வருடங்கள் ஆன பிறகும் 28 கோடி வீடுகளுக்கு மின்சார வசதி இல்லை, இவ்வாறு மீதமாகும் மின்சாரத்தை இவர்களுக்கு நாம் கொடுக்க முடியும்.
எல்இடி விளக்குகளின் விலையை குறைப்பது மட்டு மல்லாமல், வீடுகளில் சூரிய மின்சாரம் தயாரிப்பதை ஊக்கு விக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் இதன் மூலம் 40,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடிவு திட்டமிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான விலை குறையும்.
பருவமழை குறைவு நிச்சயம் ஒரு பிரச்சினைதான். இதனால் நிலக்கரி அதிகளவு உற்பத்தி செய்வது, மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தயராகிவருகிறோம். நீர் மின்சாரம் மூலம் ஏற்படும் இழப்பினை இதன் மூலம் சரி செய்ய முடியும்.
மின் விநியோக இழப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங் களில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பிஹார் மாநிலத்தில் 40 சதவீதம் அளவுக்கு இழப்பு இருக்கிறது. இதை குறைப்பதற்கு மின்விநியோகம் மற்றும் பகிர் மான கட்டுமானத்தை மேம் படுத்தும் வேலையை செய்ய ஆரம்பித்திருக்கிறோம். இதன் மூலம் மின் இழப்பு மற்றும் மின் திருட்டினை குறைக்க முடியும்.
நிலக்கரி சுரங்கங்களில் கொள்ளையடிப்பது குறித்த கேள்விக்கு இதை கட்டுப் படுத்துவது கடினமான செயலாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியில் அதை சமாளிக்கும் பணியில் இருக்கிறோம். கண்காணிப்பு கேமிரா உள்ளிட்டவை நிறுவுவதன் மூலம் இதைக் கட்டுப்படுத்தி வருகிறோம் என்றார்.