பயணம் செய்யும் நாளுக்கு 3 நாட்கள் முன்னதாக புக் செய்யப்பட்டு வெயிட்டிங் லிஸ்டில் இருந்து ரயிலில் இடம்கிடைக்காமல் போகும் பயணிகள் விமானத்தில் சலுகைக் கட்டணத்தில் பயணிக்க இந்திய ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காகவேன்றே பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே, கோ ஏர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 100 பயணிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
இது குறித்து இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடட் (ஐஆர்சிடிசி) செய்தித் தொடர்பாளர் சந்தீப் தத்தா கூறும்போது, “ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம், விரைவில் மற்ற உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களும் சேர்க்கப்படும்” என்றார்.
அதாவது பயண தினத்துக்கு 3 நாட்கள் முன்பாக ரயில் டிக்கெட் புக் செய்து, வெயிட்டிங் லிஸ்ட்டில் இடம்பெற்று ரயிலில் இடம் கிடைக்காத பயணிகளுக்கு மட்டும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரயிலில் படுக்கை வசதி வகுப்பு மற்றும் ஏ/சி பெட்டிகளில் புக் செய்தவர்கள் இந்த சலுகைக் கட்டணத்துடன் விமானத்தில் பயணிக்கலாம்.
விமான டிக்கெட் விலை குறித்து தத்தா கூறும் போது, “வழக்கமான விமானக் கட்டணங்களை விட 30 அல்லது 40% குறைந்த கட்டணச் சலுகை அளிக்கப்படும்” என்றார்.
உள்நாட்டு விமானங்கள் பல 20% காலி இருக்கைகளுடனேயே செல்கின்றன. தற்போது ரயில்வேயுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக அந்த இருக்கைகள் நிரப்பப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.