முன்னணி கணினி தொழில்நுட்ப நிறுவனமான டெல் நிறுவனம் அடுத்த ஒரு ஆண்டுக்குள் இரண்டு மடங்கு சந்தை மதிப்பை எட்ட இலக்கு வைத்துள்ளதாக கூறியுள்ளது. தற்போது இந்த நிறுவனம் 15 சதவீத சந்தை மதிப்பை வைத்துள்ளது.
நேற்று புதிதாக ஏஐஓ வகையில் புதிய கணினி மாடலை ரூ.36,990 விலையில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கடந்த சில மாதங்களில் இந்த வகையில் நான்கு புதிய மாடல்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது நிறுவனம் 14-15 சதவீத சந்தை மதிப்பை வைத்துள்ளது.
அடுத்த 12 மாதங்களில் இதை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம் என்று டெல் இந்தியா நிறுவனத்தின் நுகர்வோர் மற்றும் சிறு தொழில் பிரிவின் துணைத் தலைவர் பி.கிருஷ்ண குமார் குறிப்பிட்டுள்ளார். இந்த வகையில் இதர முன்னணி விற்பனையாளர்களாக லெனோவா மற்றும் ஹெபி நிறுவனங்கள் உள்ளன.
ஆல் இன் ஒன் வகையிலான கணினிகளின் சந்தை 60 முதல் 70 சதவீத வளர்ச்சி உள்ளது. ஒரு காலாண்டில் 50,000 கணினிகள் விற்பனையாகிறது என்றும் கூறினார். கணினிகள் ஏற்றுமதியை பொறுத்தவரையில் 2014ம் ஆண்டில் 9.6 மில்லியன் கணினிகள் ஏற்றுமதியாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டைவிட இது 13 சதவீதம் குறைவாகும். இந்த தகவலை ஆய்வு நிறுவனமான ஐடிசி கூறியுள்ளது.
டிஜிட்டல் மயத்தை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதனால் மக்களுக்கு தொழில்நுட்ப விழிப்புணர்வு மற்றும் அவர்களுக்கு சென்று சேர்வதற்கு ஏற்ப எங்களது குறிக்கோள்களை மாற்றியமைக்கிறோம். இதன் மூலம் ‘ஸ்கில் இந்தியா’ வை உருவாக்க முடியும் என நம்புவதாக கிருஷ்ணகுமார் குறிப்பிட்டார்.