வணிகம்

பங்கு விலக்கல் இலக்கினை எட்ட முடியுமா?

செய்திப்பிரிவு

பங்குச் சந்தைகளின் தொடர் சரிவு, சராசரியை விட பருவமழை குறையும் என்ற கணிப்பு, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு ஆகிய காரணங்களால் நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு நிர்ணயம் செய்த பங்கு விலக்கல் இலக்கினை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தற்போதைய சந்தை நிலவரம் உயரும் என்று நாங்கள் நினைக்க வில்லை, அதனால் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பங்கு விலக்கல் இலக்கை எட்டுவதற்கு வாய்ப்பு குறைவு என்று உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ.69,500 கோடி அளவுக்கு பங்கு விலக்கல் மூலம் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

கூடிய விரைவில் அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்து வதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. ஒருவேளை வட்டியை உயர்த்தும் பட்சத்தில் இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறும். அந்த சமயத்தில் பங்கு விலக்கல் நடவடிக்கையை தொடரமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜூன் மாதம் அல்லது இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.50,000 கோடிக்கு பங்கு விலக்கல் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் செய்ய முடியுமா என்பது சந்தேகமே என்றார். இதுவரை ஆர்இசி நிறுவனத்தின் சில சதவீத பங்குகள் மட்டுமே விற்க முடிந்துள்ளது.

ஓஎன்ஜிசி, பிஹெச்இஎல் மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் 5% பங்குகள் மற்றும் ஐஓசி, நால்கோ மற்றும் என்எம்டிசி ஆகிய நிறுவனங்களின் 10% பங்குகள் விலக்கிக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

SCROLL FOR NEXT