வரி ஏய்ப்பாளர்களைக் கண்டு பிடித்து அவர்களிடமிருந்து நேர்மையான முறையில் வரியை வசூலியுங்கள் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய நேரடி வரி வருவாய் வாரியத்தின் (சிபிடிடி) மாநாட்டில் அவர் மேலும் பேசியது:
வரி ஏய்ப்பாளர்கள்தான் வருமான வரித்துறை அதிகாரி களைக் கண்டு அஞ்ச வேண்டும். வரி செலுத்தும் நேர்மையானவர்கள் எதற்கும் பயப்படத் தேவை யில்லை என்பதை உணரும்படி உங்களது நடவடிக்கை இருக்க வேண்டும்.
வரி ஏய்ப்பு என்பது நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிடும். அத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து வரி வசூலிப்பதில் தயவு தாட்சண்யம் காட்டக் கூடாது. இத்தகைய நடவடிக்கையானது நேர்மையான, ஒளிவு மறைவற்ற முறையிலானதாக இருக்க வேண்டும்.
புதிய கருப்புப் பண தடுப்புச் சட்டமானது, வெளிநாடுகளில் வரி ஏய்ப்பு செய்து முதலீடு செய்யப்பட்ட பணத்தை திரும்பவும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காகப் போடப்பட்டது. இதைப் பற்றி நேர்மையாக வரி செலுத்துவோர் சிறிதும் பயப்படத் தேவையே இல்லை. இது முழுக்க முழுக்க வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்வோரைக் கண்டுபிடித்து தண்டிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
நியாயமாக வரி மதிப்பீடு செய்வோர் அனைவருமே வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றே வலியுறுத்துவர். அதேசமயம் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை வரித்துறை அதிகாரிகளாகிய நீங்கள் செய்ய வேண்டும். வரி ஏய்ப்பு செய்வோர் மீது எத்தகைய கடுமையான நடவடிக்கை பாயும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
மத்திய அரசும், நிதி அமைச்சகமும் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. இதற்காக நாடாளு மன்றத்தில் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. அத்துடன் பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் உள்நாட்டில் முறையற்ற பண பரிவர்த்தனையை தடுக்க கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
கருப்புப் பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே இந்த வரம்பில் தப்பியவர்கள் இப்போது அரசு அளிக்கும் சலுகை மூலம் வரியைச் செலுத்தி சுத்தமானவர்களாக செல்லலாம். அவர்கள் எதிர்காலத்தில் கவலைப்படத் தேவையில்லை.
வரி வசூல் அளவு அதிகரிக்க வேண்டும் அதன் மூலம்தான் சமூக கட்டமைப்பு வசதிகளை, திட்டங்களைச் செயல்படுத்த முடியும். அத்துடன் வரி செலுத்தும் தனி நபர்களுக்குச் சலுகைகளை அளிக்க முடியும் என்றார்.
நடப்பு நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் 14 சதவீதம் முதல் 15 சதவீத அளவுக்கு அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் அரசின் நிதிப் பற்றாக்குறை 3.9 சதவீத அளவுக்கு கட்டுப்படும் என்றார்.
பற்றாக்குறையைக் கட்டுப் படுத்துவதை விட சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவிடுவதற்கும் அரசு முன்னு ரிமை அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். இதனால் பற்றாக்குறையைக் குறைப்பதில் அரசு கவனம் செலுத்தவில்லை என்று அர்த்தமல்ல, செலவுகளை அதிகரிப்பதால் வளர்ச்சிக்கு வழியேற்படும் என்றார்.
வரி வசூல் தொகையை கட்டமைப்பு, பாசனம் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றார்.
கருப்பு பணத்தை மீட்பதில் அரசு எடுத்து வரும் முயற்சிகளை ஏற்கெனவே விளக்கிவிட்டது. இனிவரும் காலங்களில் இதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள்தான் வெளியாகும் என்றார்.
வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பது, வசூலாகும் வரியின் அளவு அதிகரிக்கும்போது நேர்மையாக வரி செலுத்துவோருக்கு அளிக்கப்படும் சலுகைகளின் அளவு அதிகரிக்கும் என்றார்.
வருமான வரி விதிமுறைகள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. வரி செலுத்துவோர் துன்புறுத்தப்பட மாட்டார்கள். அதேசமயம் வரி ஏய்ப்போர் நிச்சயம் தப்பிக்க முடியாது என்றார்.
சீரான வரி விதிப்பு முறைக்காக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை அரசு கொண்டு வர உள்ளது. அதேபோல நிறுவனங்கள் வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் சலுகைகளை போதுமான அளவுக்கு அளிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஜேட்லி கூறினார்.