இந்தியா முழுவதும் 804 திட்டங்கள் தேங்கி உள்ளன. இதில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் 8 சதவீத திட்டங்கள் மட்டுமே தேக்கம் அடைந்திருக்கின்றன என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் வெங்கடேஷ் நாயக் என்ற களப்பணியாளரின் கேள்வியில் இந்த தகவல் கிடைத்திருக்கிறது.
804 திட்டங்களில் 8.2 சதவீத திட்டங்கள் (அல்லது 66 திட்டங்கள்) மட்டுமே நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் தேக்கம் அடைந்திருக்கிறது. இதில் அரசாங்கத்தின் 29 திட்டங்களும், தனியார் நிறுவனங்களின் 37 திட்டங்களும் அடங்கும்.
இதில் 95 திட்டங்கள் அல்லது 11.8 சதவீத திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததால் நிறுத்தப்பட்டிருக்கிறது. 97 திட்டங்கள் தற்போது சாதகம் இல்லாத சூழல் நிலவுவதால் நிறுத்தப்பட்டிருக்கின்றன. 90 திட்டங்கள் நிறுவனர்கள் ஏற்படுத்தும் காலதாமதம் காரணமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
150 திட்டங்கள் நிறுத்தப்பட்ட தற்கு காரணம் ஏதும் குறிப்பிடாமல் இதர காரணங்களால் தேக்கம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 120 திட்டங்களுக்கு எந்தவிதமான தகவல்களும் இல்லை.
நிலம் கையகப்படுத்துவதால் ஏற்பட்டிருக்கும் திட்டங்களின் மொத்த மதிப்பு 1.1 லட்சம் கோடி ரூபாயாகும். சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்காததால் 30 திட்டங்கள் கிடப்பில் உள்ளன. தவிர, எரிபொருள், மூலப்பொருள், இயற்கை சூழல் காரணமாக பல திட்டங்கள் தேக்கமடைந்துள்ளன.
மொத்தம் தேங்கி இருக்கும் திட்டங்களில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 125, குஜராத் மாநிலத்தில் 63, மேற்கு வங்காளத்தில் 55, கர்நாடகாவில் 52 மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் 52 திட்டங்கள் தேங்கியுள்ளன.