வணிகம்

நடுத்தர வர்க்கத்தின் நாயகன்: மாருதி ஆல்டோ

எம்.மணிகண்டன்

மாருதி சுசுகியின் ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ கே 10 கார்கள், இந்தி யாவில் கடந்தாண்டு அதிகம் விற்பனையானவை. நடுத்தர வர்க்கத்தினருக்கு வரப்பிரசாதமாக இருக்கும் ஆல்டோவின் இந்த அசுரப் பாய்ச்சல் பல முன்னணி சொகுசு கார் நிறுவனங்களின் மூக்கில் விரல் வைக்க வைத் துள்ளது.

மாருதி சுசுகி பிறந்த கதை நாட்டுக்கே தெரியும். டெல்லிக்கு அருகே குர்கானில் 1982-ம் ஆண்டு மாருதி சுசுகியின் 800 ரக கார்களின் உற்பத்தி தொடங்கியது. இந்திரா காந்தி காலத்தில் தனது பயணத்தை தொடங்கிய மாருதியின் வெற்றி, இன்று மோடி காலத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியா முழுக்க 1,454 இடங் களில் சேவை மையங்களையும், 1,097 இடங்களில் விற்பனை மையங்களை கொண்டுள்ள மாருதி நிறுவனம், ஆல்டோ 800, ஆல்டோ கே 10, வேகன் ஆர், செலெரியோ, ஸ்விஃப்ட், ரிட்ஸ் என நடுத்தர வர்க்கத்துக்கான கார்களையே தொடர்ந்து சந்தைப் படுத்தி வருகிறது.

மொத்தம் 14 ரகங்களில் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் அளவுக்கு விற்பனையாகும் மாருதி கார்கள், “A Car For Every Purse And Purpose” என்ற ஆங்கில வரிகளுக்கு மிகவும் பொருத்தமானவை.

இந்தியாவிலேயே அதிகம் விற் பனையாகிற என்ற பெருமையை மாருதி சுசுகியின் ஆல்டோ கார்கள் பெற்றுள்ளன. 2014- 2015-ம் ஆண்டில் மட்டும் 2,64,492 ஆல்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே 2013 2014-ம் ஆண்டில் 2,58,281 ஆக இருந்தது. இந்த 2 லட்சத்து சொச்சம் பேரும் அம்பானிகள் கிடையாது. அவர்கள் அனைவரும் மாதச் சம்பளத்தில் உழலும் நடுத்தர வர்க்கத்தினர்.

ஆல்டோ கே 10 ரக காரை பயன்படுத்தும் சென்னை நங் கநல்லூரை சேர்ந்த நிவாசன் என்பவரிடம் கேட்ட போது, “ எனது தந்தை மத்திய அரசு அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். அவருக்கு கார்கள் மீது அதிகப்பிரியம் உண்டு.

அவரது கனவை சாத்தியமாக்கியது மாருதி 800. 80-களின் மத்தியில் வாங்கிய அந்தக்காரை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக வைத்திருந்தோம். அதையடுத்து எனது காலத்தில் ஆல்டோ 800-க்கு மாறினோம்.

கடந்தாண்டு ஆல்டோ கே 10 அறிமுகப்படுத்தப்படவே நாங்கள் அதற்கு மாறினோம். விலை குறைவு, ஆன் ரோடு விலையாக சுமார் ரூ.3 லட்சத்திலேயே கிடைக் கிறது. சொன்னபடியே லிட்டருக்கு 16 முதல் 22 கிமீ மைலேஜ் தருகிறது.இதற்கு முன்பிருந்ததை காட்டி லும் பெரிய சக்கரங்கள், பின்னிருக் கையில் கால் நீட்டிக்கொள்ள கூடுதல் இடம், ஏசியை கூட்டும் போது வேகம் குறைவதில்லை, எளிதாக கையாளக்கூடிய ஸ்டேரிங் என பல சாதகமான அம்சங்களை கொண்டுள்ள ஆல்டோ, நடுத்தர வர்க்கத்தினருக்கு நம்பகமான கார்’’ என்றார்.

சென்னையில் மாருதி நிறுவன கார்களை அதிகளவில் விற்பனை செய்யும் கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி செந்திலிடம் கேட்ட போது, “ முதல் முறை கார் வாங்குவதற்கு விரும்புகிறவர்கள் ஆல்டோ கார் களைத்தான் வாங்குகிறார்கள்.

பட்ஜெட்டுக்குள் கார் வாங்க விரும்புபவர்கள், இப்போ தெல்லாம் ஆல்டோவைத்தான் கேட்கிறார்கள். குறிப்பாக டிரைவிங் கற்றுக் கொள்கிற பெண்கள், வயதான வர்கள் சொந்தமாக கார் வாங்க நினைக்கும் போது, மாருதி ஆல்டோ 800, கே 10 ரகங்கள் தான் அவர்களது தேர்வாகவுள்ளது. இந்தக் கார்கள் ரூ 3.27 லட்சம் முதல் விற்பனையாகின்றன.

செகண்ட் கார் விற்பனையிலும் ஈடுபடுவதால் ஆல்டோ தவிர, மாருதி 800ஐ கூட சிலர் கேட் கிறார்கள். அந்தளவுக்கு இந்த கார்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

மாதத்துக்கு குறைந்தது சுமார் 100 பேராவது மாருதி கார்களை பற்றி விசாரித்து விடுவார்கள் என்றார். தாராளமயக் கொள்கைக்கு பின்பு தான் இந்தியாவில் ஆட்டோ மொபைல் சந்தை விரிவடைந்தது என்றாலும், அதற்கான தொடக்கப் புள்ளி மாருதிதான். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கடந்துவிட்டன.

வாழ்க்கையில் ஒரு காரையாவது வாங்கி விட வேண்டும் என்றிருந்த பல லட்சம் மிடில் கிளாஸ் மாதவன்களின் கனவை நிறைவேற்றியதில் மாருதி யின் பங்கு கணிசமானது.

manikandan.m@thehindutamil.co.in

SCROLL FOR NEXT