கடந்த நவம்பரில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக சீன மத்திய வங்கி வட்டியை குறைத்தது. சர்வதேச மந்த நிலைக்கு பிறகு வளர்ச்சி குறைந்ததால் வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுத்திருக்கிறது சீன மத்திய வங்கி.
கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 5.1 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் ஒரு வருடத்துக்கான டெபாசிட் விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 2.25 சதவீதமாக இருக்கிறது. இவை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தி பிபுள் பேங்க் ஆப் சீனா தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சீன மத்திய வங்கி, இந்த நடவடிக்கைகள் பொருளாதார மேம்பாடுக்கு பெரிதும் உதவும் என்று தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி 7 சதவீத அளவில் இருந்தது. 2009-ம் ஆண்டுக்கு பிறகு வளர்ச்சி குறைவது இப்போதுதான்.
ரியல் எஸ்டேட் சந்தை சரிவு, ஒட்டு மொத்த உள்நாட்டு தேவை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் வளர்ச்சி குறைந்தது. இதனால் பொருளாதார வல்லுநர்கள் வட்டி விகிதத்தை குறைத்து, தேவையை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நடவடிக்கை ஆச்சர்யமானது அல்ல. ஏற்கெனவே பணவீக்கம் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாக இருந்தது. அதேபோல வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவரும் சூழலில் இது ஆச்சர்யமல்ல என்று பெய்ஜிங்கை சேர்ந்த பொருளாதார வல்லுநர் தெரிவித்தார்.