வர்த்தகத்தின் இடையே நிப்டி 8000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது
பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடு தொடர்ந்து வெளி யேறி வருவதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. 2013 செப்டம்பரில் இருந்த நிலைமைக்கு ரூபாய் மதிப்பு சரிந்து விட்டது.
2013-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி ஒரு டாலர் 64.25 ரூபாயாக இருந்தது. அந்த நிலையை ரூபாய் இப்போது தொட்டுவிட்டது. தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக தினமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.
புதன்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 63.54 ரூபாயாக இருந்தது. ஆனால் நேற்றைய வர்த்தகத்தில் ஒரு சதவீதத்துக்கும் கீழே சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 64.23 ரூபாயாக இருந்தது.
பங்குச்சந்தையில் இருந்து தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறிக் கொண்டிருப்பதுதான் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த 14 வர்த்தக தினங்களில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றிருக்கிறார்கள். பங்குச்சந்தை மட்டுமல்லாமல் கடன் சந்தையில் இருக்கும் முதலீடுகளையும் தொடர்ந்து விற்று வருகிறார்கள்.
அந்நிய நிறுவன முதலீட்டா ளர்கள் வெளியேறுவதற்கு குறைந்தபட்ச மாற்று வரியில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
பங்குச்சந்தை சரிவு
தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தன. ஆறரை மாதங்களுக்கு முன்பு இருந்த புள்ளிகள் அளவுக்கு பங்குச்சந்தை சரிந்தது. சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 26599 புள்ளியிலும், நிப்டி 39 புள்ளிகள் சரிந்து 8057 புள்ளியிலும் முடிவடைந்தன. கடந்த அக்டோபர் 21-ம் தேதி முக்கிய பங்குச்சந்தை குறியீடுகள் இந்த நிலையில் இருந்தன.
வர்த்தகத்தின் இடையே நிப்டி 8000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. வர்த்தகத்தின் இடையே 7997 புள்ளிகள் வரை சென்ற நிப்டி பிறகு சரிவில் இருந்து மீண்டது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் சரிந்து முடிவ டைந்தன. புதன்கிழமை மட்டும் 1,700 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றிருக் கிறார்கள்.
துறைவாரியாக பார்க்கும்போது வங்கி குறியீடு 3 சதவீதம் அள வுக்கு சரிந்து முடிவடைந்தது.