ஹவுசிங்.காம் நிறுவனர்களில் ஒரு வரும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான ராகுல் யாதவ், தன் வசமிருந்த அனைத்து பங்குகளையும் ஊழியர்களுக்கு அளித்துவிட்டார். இந்நிறுவனத்தில் இவருக்கு 4.5 சதவீத பங்குகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடியாகும். இந்த பங்குகளை நிறுவனத்தில் பணியாற்றும் 2,251 ஊழியர்களும் பகிர்ந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் இந்த அதிரடி முடிவால் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் நிறுவன பங்குதாரர் களாகியுள்ளனர். இருப்பினும் யாதவின் முடிவால் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஊழியர்களுக்கு ஓராண்டு சம்பளம் ஒரே சமயத்தில் கிடைப்பதைப் போல இந்த பங்குகள் அவர்களுக்குக் கிடைத் துள்ளன. இது தொடர்பான அறிவிப்பை நிறுவன ஊழியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் யாதவ் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளார்.
ரியல் எஸ்டேட் இணைய தளங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு முன்னேறி வரும் ஆன்லைன் நிறுவனங்களில் ஹவுசிங்.காம் நிறுவனம் முக்கிய மானதாகும். இந்நிறுவனத்தில் 9 கோடி டாலரை ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் முதலீடு செய்தபோது இந்நிறுவனம் அனைவரது கவனத்தையும் பெரிதாக ஈர்த்தது. இது தவிர பிற முதலீட்டாளர்களும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
தனக்கு 26 வயதே ஆகும் நிலையில் இப்போது பணத்துக்கு அதிக தேவை இருக்கவில்லை. இவ்வளவு சிறிய வயதில் இத்தகைய தொகை தனக்கு தேவைப்படாது என்பதால் ஊழி யர்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு செய்ததாக ராகுல் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஹவுசிங்.காம் நிறுவனம் இரண்டு காரணங்களுக்காக தொடங்கப்பட்டது. சர்வதேச அளவில் வீடு தேடும் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இத்தகைய பிரச்சினைக்குத் தீர்வு அளிக்கும் வேலை தனக்கு மிகுந்த சவாலாக இருந்தது என்றும், ஒவ்வொரு நாட்டிலும் 5 நிறுவனங்களே இத்தகைய பணியை செய்து வருகின்றன. இருப்பினும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. உலகம் முழுவதும் சுமார் 500 நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன.
ஒரே சீரான சர்வதேச நிறுவனமாக இதை உருவாக்கத் திட்டமிட்டு ஒரே நிறுவனம் அனைத்து தீர்வையும் அளிக்கும் வகையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதை ஓரளவு எட்டுவதற்கு தொழில்நுட்பமும், புதிய உத்தி களும் உதவியாக இருந்தன. இரண்டாவது இத்துறையில் இங்கு செயல்படுவதற்கான வாய்ப்பும், அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளும் இருந்தன அதனால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டதாக யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
சமீபகாலமாக யாதவ் பற்றி பல்வேறு சர்ச்சைக்கிடமான செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரலில் தான் பதவி விலகப் போவதாக இயக்குநர் குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன் புத்திசாலித்தனமில்லாத இயக்குநர் குழுவோடு இணைந்து செயல்பட முடியாது என இயக்குநர் குழுவை விமர்சித்துள்ளார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியது. கடந்த மார்ச் மாதத்தில் துணிகர முதலீட்டு நிறுவனமான செக்யூஷியா கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலேந்திர சிங்கை கடுமையாக விமர்சித்திருந்தார்.
கடந்த ஏப்ரல் 30ம்தேதி தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார். அத்துடன் இயக்குநர் குழுவினரை விமர்சித்ததற்காக மன்னிப்பும் கோரியிருந்தார்.
ஹவுசிங்.காம் நிறுவனம் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை ஐஐடி-யைச் சேர்ந்த 12 நண்பர்கள் குழு ஆன்லைன் தளத்தை உருவாக்கினர். வீடு வாடகைக்கு விடுவது, விற்பது, வாங்குவதற்கு வசதியாக இந்த தளம் செயல்பட்டது. இதில் அதிக பட்ச பங்குகள் யாதவ் வசம் இருந்தன. மற்ற நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாக 9 சதவீத பங்கு கள் உள்ளன.
இந்நிறுவனத்தில் சாப்ட்பேங்க் நிறுவனத்துக்கு 32 சதவீத பங்குகளும் நெக்சஸ் வெஞ்சர்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடம் 19 சதவீத பங்குகளும் உள்ளன.