நிறுவனங்களின் இயக்குநர் குழு கூட்டம் மற்றும் பிற கூட்டங்களின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்திய நிறுவன செயலர்கள் சங்கம் (ஐசிஎஸ்ஐ) அளித்த விதிமுறைகளை மத்திய நிறுவன விவகார அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. இது ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று சங்கத்தின் தலைவர் அதுல் ஹெச் மேத்தா தெரிவித்தார்.
நிறுவனங்கள் நடத்தும் இயக்குநர் குழு கூட்டம் மற்ற கூட்டங்கள் உரிய வழிகாட்டுதல் இல்லாமல் இலக்கின்றி நடத்தப் படுகின்றன. இதனால் அவை நடத்தப்படுவதற்கான நோக்கம் எட்டப்படுவதேயில்லை. ஐசிஎஸ்ஐ வகுத்தளித்த விதிமுறைகள் இனி கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டுதலாய் அமையும் என்றார். இது நிறுவன சட்டம் 2013-க்கு ஏற்றார்போல வகுக்கப் பட்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
புதிய விதிமுறைகள் பட்டிய லிடப்பட்ட நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்கு மிகவும் கட்டாயமாகும். இதன்படி 8 லட்சம் நிறுவனங்கள் புதிய விதிமுறைகளின்படி செயல் பட வேண்டும் என்றார்.
சென்னையில் நேற்று ஐசிஎஸ்ஐ ஏற்பாடு செய்திருந்த பங்குச் சந்தை விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இத்தகவலைத் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியில் பங்குச் சந்தை மிக முக்கிய இடம் வகிப்பதால் ஐந்து நகரங்களில் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஐசிஎஸ்ஐ ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிறுவனங்களுக்கு தொழிலை விரிவுபடுத்தவும், பொதுமக்களின் சேமிப்புக்கு உரிய பலன் கிடைப்பதிலும் பங்குச் சந்தை மிக முக்கிய பங்கு வகிப்பதாக நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற தமிழக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் எஸ். கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
நிறுவனங்கள் கட்டாயம் நிறுவனச் செயலர்களை நியமிக்க வேண்டும் என செபி உத்தர விட்டதைத் தொடர்ந்து நிறுவன செயலர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்று சங்கத்தின் துணைத் தலைவர் மம்தா பினானி குறிப்பிட்டார்.