மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதி ஆண்டில் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 13.82 சதவீதம் உயர்ந்து ரூ.395 கோடியாக அதிகரித்துள்ளது என அதன் நிர்வாக இயக்குநர் என். காமகோடி தெரிவித்தார்.
சிட்டி யூனியன் வங்கியின் 2014-15-ம் நிதியாண்டிற்கான நான்காம் காலாண்டு மற்றும் வருடாந்திர கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி யான டாக்டர் என்.காமகோடி நேற்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வங்கியின் நிகர லாபம் 18.8 சதவீதம் உயர்ந்து 99.07 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.83.34 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் 720 கோடி ரூபாயில் இருந்து இப்போது 793 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகரலாபம் 13.8% உயர்ந்து 395 கோடி ரூபாயாக உள்ளது. அதே போல ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 3,102 கோடி ரூபாயாக இருக்கிறது என்றார்.
வங்கியின் இயக்குநர் குழு ஒரு பங்குக்கு 1.10 ரூபாய் டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்திருக்கிறது என்றார் காமகோடி.
ரூ.100 கோடி வசூல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகளில் சிட்டியூனியன் வங்கியும் ஒன்று. இந்த நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாயை வங்கி கடனாகக் கொடுத்திருக்கிறது. இதில் 100 கோடி ரூபாய் வசூலாகிவிட்டதாக காமகோடி தெரிவித்தார். இந்த தொகை மார்ச் 31-க்குள் செலுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகை விரைவில் வசூலாகும் என்று எதிர்பார்ப்பதாக காமகோடி தெரிவித்தார்.