வணிகம்

மியூச்சுவல் பண்ட் சொத்து மதிப்பு ரூ.20 லட்சம் கோடியாக உயரும்: ஆம்பி தலைவர் சந்தீப் சிக்கா தகவல்

செய்திப்பிரிவு

இந்திய பொருளாதாரத்தின் மீது சாதகமான மனநிலை நிலவுவதால் இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு ஆண்டுக்கு 18.6 சதவீதம் உயரும். வரும் 2018-ம் ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொகை 20 லட்சம் கோடியாக உயரும் என்று இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கத்தலைவர் (ஆம்பி) சந்தீப் சிக்கா தெரிவித்தார்.

சமீபத்தில் மியூச்சுவல் பண்ட்கள் கொடுத்திருக்கும் வருமானம், இந்திய பொருளாதாரம் மீதும், மியூச்சுவல் பண்ட் மீதும் சிறுமுதலீட்டாளர்களுக்கு உருவாகி இருக்கும் நம்பிக்கை, அரசாங்கம் எடுத்து வரும் நம்பிக்கைகள் என அனைத்தும் சேர்ந்து மியூச்சுவல் பண்ட் துறைக்கு சாதகமாக இருக்கும் என்று சிக்கா தெரிவித்தார்.

இவர் ரிலையன்ஸ் கேபிடல் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைவரும் கூட. மேலும் இவர் கூறியதாவது.

தற்போது நான்கு லட்சம் மியூச்சுவல் பண்ட் கணக்குகள் உள்ளன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கணக்குகள் தொடங்கப்படும். கடந்த வாரத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியே எடுத்திருக்கிறார்கள், ஆனால் உள்நாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 9,500 கோடி ரூபாய் அளவுக்கு நிகர முதலீடு செய்திருக்கிறார்கள்.

பி.எப். தொகை பங்குச்சந்தைக்கு வரும் போது, பங்குச்சந்தையில் சமநிலை இன்னும் அதிகரிக்கும். கடந்த ஒரு வருடத்தில் மியூச்சுவல் பண்ட் துறை சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஒரு வருடத்தில் மியுச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு 31% உயர்ந்து 11.8 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 22 லட்சம் புதிய மியூச்சுவல் பண்ட் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

கடந்த சில வருடங்களில் மியூச்சுவல் பண்ட்களின் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கு கிடைத்த வருமானம் காரணமாக புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட் பக்கம் கவனத்தை திருப்புகிறார்கள். அதேபோல ஏற்கெனவே முதலீடு செய்து லாபம் பார்த்தவர்களும் தங்களது முதலீட்டை உயர்த்தி வருகிறார்கள் என்றார்

மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் மியூச்சுவல் பண்ட் குறித்து பல சிறிய நகரங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகின்றது. இதனால் புதிதாக மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நீண்ட கால செல்வம் மியூச்சுவல் பண்ட்களில் கிடைக்க அதிகம் வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு மொத்த முதலீட்டில் இரண்டு சதவீதம் மட்டுமே மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யப்படுகிறது. தற்போதைய பல சாதகமான சூழல் காரணமாக இங்கு முதலீடு மேலும் உயரும் என்று சந்திப் சிக்கா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT