வணிகம்

வரி பிரச்சினையை தீர்க்காவிட்டால் 7.5 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி சந்தேகமே: தரச்சான்று நிறுவனம் மூடி’ஸ் கருத்து

செய்திப்பிரிவு

தற்போதைய வரி பிரச்சினையை தீர்க்காவிட்டால் 7.5 சதவீதத்துக்கு மேலான வளர்ச்சி சாத்தியம் இல்லை என்று தரச்சான்று நிறுவனமான மூடி’ஸ் கருத்து தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்க்காவிட்டால், அது முதலீடுகளை பாதிக்கும் என்றும் மூடி’ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

தற்போதைய நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது வளர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. இது சிறப்பானதுதான் என்று மூடி’ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் அட்சி சேத் (Atsi Seth) தெரிவித்தார்.

தற்போது ஸ்திரமான அரசியல் சூழல் நிலவுவதால் நீண்ட கால சீர்த்திருத்தங்களை தொடர முடியும் என்பது இந்தியாவுக்கு சாதகமான விஷயம். தற்போதைய சூழலில் நிதிஆண்டில் 7.5 சதவீதம் என்பது சிறப்பான வளர்ச்சியாக இருந்தாலும், இதற்கு மேலான வளர்ச்சி தற்போதைய சூழ்நிலையில் சாத்தியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

களைய வேண்டிய சிக்கல்கள்

வரி விதிப்புகளில் இருக்கும் முறையற்ற தன்மையை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதனால் முதலீடுகள் பாதிக்கப்படும். வரி விதிப்புகளில் தெளிவு அவசியம். நீடித்த நிலையான வளர்ச்சி வேண்டும் என்றால் இதை செய்ய வேண்டும் என்றும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி நன்றாக இருந்தாலும், சில சிக்கல்களை களைய வேண்டியதும் அவசியம் என்று சேத் குறிப்பிட்டார்.

பணவீக்கம் அதிகமாக இருப்பது ஒரு முக்கியமான பிரச்சினை. நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்து வருகிறது. மேலும் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றால் தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும். தனியார் துறையை ஊக்குவிக்க கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சேத் கூறினார்.

சர்வதேச சூழலால் பாதிப்பு

சர்வதேச சூழலால் இந்தியா உள்ளிட்ட ஆசிய பிராந்திய நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று மூடி’ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் போது இந்தியா உள்ளிட்ட நாடுகள் சில சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தும் போது இந்த அனைத்து நாடு களும் பொதுவான சவாலை சந்திக்கும்.

அதே சமயத்தில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பெரும்பாலான நாடுகள் எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால் இந்த நாடுகள் தங்களுடைய நிதிப் பற்றாக்குறையை குறைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் மூடி’ஸ் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT