ஜப்பானிய நிறுவனமான டாய்ச்சி சாங்க்யோ, சன்பார்மா நிறுவனத் தில் இருந்த தன்னுடைய 9 சதவீத பங்குகளை செவ்வாய்க்கிழமை விற்றது. இந்த பங்குகளை சன் பார்மா நிறுவனத்தின் நிறுவனர் திலீப் சாங்வி வாங்கினார் என்று சந்தையில் வதந்தி உருவானது.
இந்த நிலையில் டாய்ச்சி சாங்க்யோ விற்ற பங்குகளை திலீப் சாங்வி வாங்கவில்லை என்று மும்பை பங்குச்சந்தைக்கு சன் பார்மா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி சன்பார்மா நிறுவனத்தில் 54.71 சதவீத பங்குகள் திலீப் சாங்வி வசம் உள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 9 சதவீத அளவுக்கு சரிந்து முடிந்த இந்த பங்குகள், நேற்றைய வர்த்தகத்தில் 1.6 சதவீதம் உயர்ந்து முடிந்தது.
2008-ம் ஆண்டு ரான்பாக்ஸி நிறுவனத்தை கையகப்படுத்திய தன் மூலம் இந்திய சந்தையில் டாய்ச்சி சாங்க்யோ நிறுவனம் நுழைந்தது.