இந்தியாவின் ஏற்றுமதி இலக்கினை அடைய முடியாது என்று வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார். 2014-15 நிதி ஆண்டுக்கான ஏற்றுமதி இலக்கு 34,000 கோடி டாலராக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் 30,800 முதல் 31,000 கோடி டாலர் வரை மட்டுமே ஏற்றுமதி இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
2013-14-ம் நிதி ஆண்டில் 31,235 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி இருந்தது. அந்த அந்த நிதி ஆண்டிலும் ஏற்றுமதி இலக்கினை இந்தியாவால் அடைய முடியவில்லை. அப்போ தைய ஏற்றுமதி இலக்கு 32,500 கோடி டாலராக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
2014 ஏப்ரல் முதல் 2015 பிப்ரவரி வரை ஏற்றுமதி 28,658 கோடி டாலராக இருந்தது. அதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் 28,407 கோடி டாலராக இருந்தது.
உற்பத்தி குறைவு, உலோகம் மற்றும் முக்கிய கமாடிட்டிகளின் விலை குறைவு, உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் போட்டித்தன்மை குறைந்தது ஆகிய காரணங்களால் ஏற்றுமதி குறைந்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். லட்சக் கணக்கான மக்கள் இந்த துறையில் பணிபுரிகிறார்கள். கடந்த நான்கு வருடங்களாகவே ஏற்றுமதி 30,000 கோடி டாலர் என்ற அளவிலே இருக்கிறது. இதிலிருந்து அதிகரித்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று இந்திய ஏற்றுமதி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரான ரபிக் அகமது தெரிவித்தார்.
2012-2013-ம் நிதி ஆண்டில் 36,000 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதிக்கு இலக்கு நிர்ணயம் செய்தோம், ஆனால் அப்போது 30,060 கோடி டாலர் அளவில் மட்டுமே ஏற்றுமதி இருந்தது.
அரசாங்கம் ஏற்றுமதியை உயர்த்த பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில்கூட அடுத்த ஐந்தாண் டுகளுக்கான அந்நிய வர்த்தக கொள்கையை அறிவித்திருக்கிறது. இதில் தற்போதைய நிலைமையை விட இரு மடங்கு அளவுக்கு ஏற்றுமதிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
2019-20ம் நிதி ஆண்டில் 90,000 கோடி டாலர் அளவுக்கு சேவை மற்றும் உற்பத்தி துறையில் ஏற்றுமதி இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது.