வணிகம்

நடப்பு நிதியாண்டில் ரூ.13 ஆயிரம் கோடி வளர்ச்சிக்கு இலக்கு- கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

‘‘விரிவாக்கத் திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.13 ஆயிரம் கோடி வளர்ச்சிக்கு இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது’’ என கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம், தனது புதிய நகைக் கடையை வரும் 17-ம் தேதி சென்னையில் திறக்கிறது.

இதுகுறித்து, கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி.எஸ்.கல்யாணராமன், நிர்வாக இயக்குநர்கள் ரமேஷ் கல்யாணராமன், ராஜேஷ் கல்யாணராமன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டில் 12 கிளைகளும், இந்தியாவில் 65 கிளைகளும் உள்ளன. இதில், தென்னிந்தியாவில் மட்டும் 50 கிளைகள் உள்ளன. இந்நிலை யில், சென்னை தி.நகரில் முதன் முறையாக எங்கள் புதிய நகைக் கடை வரும் 17-ம் தேதி திறக்கப்படுகிறது.

எங்கள் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ள நடிகர்கள் அமிதாப்பச்சன், பிரபு, நாகார்ஜுன், சிவராஜ்குமார், விக்ரம் பிரபு மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யாராய், மஞ்சுவாரியார் ஆகியோர் எங்கள் புதிய நகைக் கடையை திறந்து வைக்கின்றனர்.

ரூ.200 கோடி முதலீட்டில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இக்கடையில் 600 கிலோ எடையுள்ள ஐந்து லட்சம் நகைகள் விற்பனைக்கு வைக்கப்படும். இங்கு ஒரே நேரத்தில் 200 கார்கள் மற்றும் 300 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது.

அதே போல், தனிப்பட்ட முறையில் நகை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தாங்கள் வருவதை தெரிவித்தால் ‘பிரைவேட் லாஞ்ச்’ எனப்படும் தனிப் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தி.நகரைத் தவிர அடையார், வேளச்சேரி, குரோம்பேட்டை மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களிலும் புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். இதில், இரண்டு கிளைகள் நடப்பு நிதியாண்டிலும், மற்றவை அடுத்த நிதியாண்டுக்குள்ளும் திறக்கப்படும்.

இந்த நான்கு கிளைகளிலும் மொத்தம் ரூ.300 கோடி முதலீடு செய்யப்படும். அடுத்த நிதியாண்டில் இந்தியாவிலும், மேற்கு ஆசியாவிலும் நாங்கள் 22 புதிய கிளைகளை திறப்பதற்காக ரூ.800 கோடி முதலீடு செய்ய உள்ளோம். மேலும், விரிவாக்கத் திட்டத்தின் மூலம் நடப்பு 2015-16-ம் நிதியாண்டில் ரூ.13 ஆயிரம் கோடி வளர்ச்சியை இலக்காக நிர்ணயித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT