இந்தியப் பங்குச் சந்தை நேற்று ஏற்ற இறக்கமான வர்த்தகப் போக்கை கொண்டிருந்தது. சந்தை முடிவு நேரத்துக்கு முன்னர் சற்றே ஏற்றம் கண்ட சென்செக்ஸ் 12 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 28516 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி ஏற்ற இறக்கம் இல்லாமல் 8660 புள்ளிகள் முடிந்துள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டுவரும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள வில்லை. இதன் காரணமாக சந்தை காலையிலிருந்தே சரியத் தொடங்கியது. இதனால் வங்கிப் பங்குகள் சரிவடைந்தன.
ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ பங்குகள் சரிந்தன. பேங்க் நிப்டி பங்குகள் 136 புள்ளிகள் வரை சரிந்தது. நேற்றைய வர்த்தக நேரத்தில் சந்தை 28284 புள்ளிகள் வரை இறங்கியது. சந்தை முடிவு நேரத்துக்கு முன்னர் உலோகம் மற்றும் சுரங்கப் பங்குகளின் ஏற்றம் காரணமாக சரிவிலிருந்து மீண்டது.
நேற்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட், பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன. ஐடிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிந்தன.