வணிகம்

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2% ஆக தொடரும்: சி. ரங்கராஜன்

செய்திப்பிரிவு

இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீத அளவுக்கு இருக்கும். இதேநிலை அடுத்த சில ஆண்டுகள் தொடரும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி. ரங்கராஜன் தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் உள்ள பொருளாதார மற்றும் சமூகவியல் கல்வி மையத்தின் முதுகலை படிப்புப் பிரிவு தொடக்க விழாவில் திங்கள்கிழமை பங்கேற்ற ரங்க ராஜன், இது குறித்து செய்தி யாளர்களிடம் கூறியது:

தங்கம் இறக்குமதி குறைந்து வருவது, பணவீக்கம் குறைவது உள்ளிட்ட காரணிகளால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) குறையும். தங்கத்தை ஒரு முதலீடாக மற்றும் சொத்தாகக் கருதும் போக்கு மக்களிடையே குறைந்து வருகிறது. மேலும் ஏற்றுமதி அதிகரித்து வருவதால் சிஏடி குறையும். அத்துடன் தங்கத்தின் விலையும் குறைந்து வருகிறது என்று சுட்டிக் காட்டினார்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிஏடி அளவு 2 சதவீதமாக அடுத்த சில ஆண்டுகளுக்கு இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில் 2013-14-ம் நிதி ஆண்டில் சிஏடி அளவு 3,200 கோடி டாலர் அளவாக இருக்கும் என தெரிவித்துள்ளார். முந்தைய நிதி ஆண்டில் (2012-13) சிஏடி 8,800 கோடி டாலராக இருந்தது. இதைக் கட்டுப்படுத்துவற்காக தங்க இறக்குமதி மீது கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்ததால், இறக்குமதி குறைந் தது.

2012-13-ம் நிதி ஆண்டில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 4.7 சதவீத அளவுக்கு உயர்ந்தது. கடந்த நிதி ஆண்டில் (2013-14) இது 1.7 சதவீத அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிதம்பரம் தெரிவித்தார்.

தங்கத்தின் விலை ஸ்திரமடைந்த பிறகு அதன் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் ரங்கராஜன் கூறினார். நிர்வாகக் காரணங் களுக்காக தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்படும். பணவீக்கம் குறைந்துவரும் நிலையில் தங்கத்தின் விலை உயர வாய்ப்பில்லை. மேலும் மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறையும்போது தங்க இறக்குமதி குறையும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

2013-14-ம் நிதி ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் குறைந்து 3,346 கோடி டாலராக இருந்தது.

எல்நினோ எனப்படும் பருவநிலை மாறுபாடு காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எந்த அளவுக்கு இருக்கும் என்று கூற முடியாது. சமயங்களில் இத்தகைய பருவநிலை குறித்த முன்னறிவிப்பு தவறாகப் போக வாய்ப்புள்ளது. எனவே இதை பொறுத்திருந்துதான் கவனிக்க வேண்டும் என்று ரங்கராஜன் கூறினார்.

SCROLL FOR NEXT