கடந்த நிதி ஆண்டில் (2014-15) அதிகம் விற்பனையான சிறந்த காராக மாருதி ஆல்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளான ஆல்டோ, ஸ்விப்ட், டிசையர், வேகன் ஆர் ஆகிய நான்கு மாடல் கார்களும் முதல் நான்கு இடத்தைப் பிடித்துள்ளன.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்ப நிலை மாடல் கார்களில் அதிகம் விற் பனையான (2,64,492) காராக ஆல்டோ முதலிடத்தில் உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் விற்பனையானதை (2,58,281) விட 2.4 சதவீதம் அதிகமாகும். தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்தக் கார் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்விப்ட் ரகக் கார்கள் 2,01,338 விற்பனையானது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1.4 சதவீதம் அதிகமாகும்.
மூன்றாமிடத்தில் மாருதி சுஸுகியின் செடான் பிரிவு காரான டிசையர் (1,92,010) உள்ளது. முந்தைய ஆண்டில் விற்பனையானதைவிட 2.3 சதவீதம் அதிகமாகும்.
மற்றொரு ஹாட்ச்பேக் மாடல் காரான வேகன் ஆர் கார்கள் மொத்தம் 1,61,250 விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.12 சதவீதம் அதிகமாகும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார்கள் மொத்தம் 99,088 விற்பனையாகி ஐந்தாமிடத்தில் உள்ளன.
முந்தைய நிதி ஆண்டில் 7-வது இடத்தில் இருந்த இந்த பிராண்ட் கார்கள் விற்பனை கடந்த நிதி ஆண்டில் 36 சதவீதம் அதிகரித் ததில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்நிறுவனத்தின் ஆரம்ப நிலை காரான இயான் கடந்த ஆண்டு ஐந்தாமிடத்தில் இருந்து தற்போது 6-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் எலைட் ஐ20 கார்கள் 7-வது இடத்தில் உள்ளன.
மொத்தம் 77,747 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஹோண்டா சிட்டி கார்கள் (77,343) 8-வது இடத்தைப் பிடித்துள்ளன.
மாருதி நிறுவனத்தின் செலரியோ (68,143) 9-வது இடத்தில் உள்ளது. ஹோண்டா அமேஸ் (66,703) 10-வது இடத்தில் உள்ளது.
கடந்த நிதி ஆண்டில் (2014-15) மொத்தம் 18,76,017 கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய நிதி ஆண்டில் மொத்தம் விற்பனையான கார்களின் எண் ணிக்கை 17,86,826 ஆகும்.