வணிகம்

12 நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு திட்டம்

செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டில் அரசு பங்கு விற்பனை மூலம் ரூ. 41 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை எட்டுவதற்காக 12 நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), நேஷனல் பெர்டிலைசர்ஸ், எம்எம்டிசி, ஹிந்துஸ்தான் காப்பர் மற்றும் ஐடிடிசி ஆகிய நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.

அரசு பங்கு விலக்கல் துறை இந்நிறுவனங்களில் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலான பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இவற்றில் சிலவற்றின் பங்குகளை விற்க அமைச்சகத்தின் ஒப்புதல் எதிர்நோக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததின்படி இஐஎல் எனப்படும் இன்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட் (இஐஎல், நால்கோ மற்றும் ஐஓசி நிறுவனங்களில் 10 சதவீத பங்குகளை விற்க முடிவ செய்யப்பட்டுள்ளது.

நேஷனல் பெர்டிலைசர்ஸ் (என்எப்எல்), ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (ஹெச்சிஎல்), இந்திய சுற்றுலா மேம்பாட்டு கார்ப்பரேஷன் (ஐடிடிசி), ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (எஸ்டிசி) மற்றும் எம்எம்டிசி ஆகிய நிறுவனங்களில் 15 சதவீத பங்குகளை விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பிஹெச்இஎல், என்டிபிசி, ராஷ்ட்ரிய ரசாயன மற்றும் உர நிறுவனம் (ஆர்சிஎப்), டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (டிசிஐஎல்) ஆகிய நிறுவனங்களில் அரசுக்குள்ள பங்கில் 5 சதவீதத்தை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டியலில் உள்ள நிறுவனங்களில் பெரும்பாலா னவற்றின் பங்குகள் நடப்பு நிதி ஆண்டில் விற்பனை செய்ய மத்திய பங்கு விலக்கல் துறை ஒப்புதல் அளித்துள்ளது. பிஹெச்இஎல், என்எம்டிசி மற்றும் நால்கோ நிறுவன பங்குகளை விற்க அமைச்சரவை ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எரிபொருள் மானியத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பாக தெளிவான வரையறை தயாராகாததால் ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்கு விற்பனை தாமதமடைந்துள்ளது என்று ஓஎன்ஜிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐஓசி பங்கு விற்பனை மூலம் ரூ. 9 ஆயிரம் கோடியும், இஐஎல் விற்பனை மூலம் ரூ. 700 கோடியும், நால்கோ பங்கு விற்பனை மூலம் ரூ. 1,200 கோடியும், என்எம்டிசி விற்பனை மூலம் ரூ. 5,300 கோடியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஹெச்இஎல் நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ. 2,900 கோடியும், என்டிபிசி மூலம் ரூ. 6 ஆயிரம் கோடியும், ஆர்சிஎப் மூலம் ரூ. 190 கோடியும், டிசிஐஎல் மூலம் ரூ. 60 கோடியும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹெச்சிஎல் பங்கு விற்பனை மூலம் ரூ. 1,000 கோடியும், ஐடிடிசி விற்பனை மூலம் ரூ. 169 கோடியும் கிடைக்கும் என தெரிகிறது.

மேலும் எம்எம்டிசி பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ. 800 கோடியும், என்எப்எல் மூலம் 240 கோடியும், எஸ்டிசி மூலம் ரூ.140 கோடியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதி ஆண்டில் ஏற்கெனவே கிராப்புற மின்மயமாக்கல் நிறுவனத்தின் (ஆர்இசி) 5 சதவீத பங்கு விற்பனை மூலம் ரூ. 1,550 கோடி கிடைத்துள்ளது. இந்நிறுவன முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

பங்கு விலக்கல் பட்டியலில் பல இடம்பெற்றிருந்தாலும் எந்த நிறுவனப் பங்குகள் முதலில் விற்பனைக்கு வரும் என்ற விவரம் வெளியாகவில்லை. நிதி அமைச்சகம் பங்குச் சந்தையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், எந்த நிறுவன பங்குகளை விற்பனை செய்ய எது ஏற்ற சமயம் என்பதை தீவிரமாக கவனித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடப்பு நிதி ஆண்டில் அரசு நிறுவன பங்கு விலக்கல் மூலம் ரூ. 41 ஆயிரம் கோடியும், உத்தி சார்ந்த பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ. 28,500 திரட்டவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

SCROLL FOR NEXT